Monday, August 12, 2013

இரவு பேருந்தில்

"கண்டக்டர் சார்! என்னை சீட் மாத்தி விடுங்க" 

"என்ன சார்? அந்த பொண்ணே பிரச்சனை இல்லன்னு சொல்லிடிச்சு. உங்களுக்கு என்ன?"

"அதுக்கு இல்ல சார். ராத்திரி தூங்கும்போது தெரியாம கை, கால் பட்டு பிரச்சினை ஆகிட கூடாது."

"இருங்க பாக்குறேன்" சொல்லிவிட்டு சென்று விட்டார் கண்டக்டர்.

எனக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு பெண்ணின் அருகில் அமர்ந்து இரவு முழுதும் பயணம் செய்ய வேண்டும். உள்ளுக்குள்ளே சந்தோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்படி பயணம் செய்வது மிக பெரிய ரிஸ்க். என்னை நம்ப முடியாது . பெண் அழகாக வேறு இருக்கிறாள். மெதுவாக ஒரக்  கண்ணால் அந்த பெண் என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். அவள் என்னை ஒரு பொருட்டாக கூட எண்ணியதாக தெரியவில்லை. உலகமே மறந்து தன் மொபைலில் பேசி கொண்டிருந்தாள். அப்படி என்னதான் பேசுகிறாள். காதை தீட்டினேன்.

"சொன்ன கேளுங்க. நான் உங்க கிட்ட அப்படி நெனச்சு பழகல"

"........"

"நான் பேசுனது உங்களை ஹர்ட் செஞ்சு இருக்கும்னுதான் திரும்ப உங்களுக்கு பிரண்ட்ஷிப் டே மெசேஜ் அனுப்பினேன்"

"....."

"நீங்க சொல்றதெல்லாம் சரியா வராது. நல்ல பிரண்டா இருக்குறதுன்னா இருங்க.கண்டபடி  மெசேஜ் பண்றதெல்லாம் வேண்டாம். பஸ் மூவ் ஆகுது. கட் செய்யுறேன்."

கட் செய்து விட்டாள். நான் கண்களை மூடி கொண்டு தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தேன். அவளின் விசும்பல் சத்தம் மெலிதாக கேட்டது. சற்று நேரத்துக்கு கண்களை திறக்க கூடாது என முடிவு செய்தேன்.

"எக்ஸ்க்யூஸ் மீ" அவளின் குரல் என்னை எழுப்பியது. கண்களை மெதுவாக திறந்தேன்.

"என்னோட மொபைல்ல சார்ஜ் இல்ல. வீட்டுக்கு ஒரு கால் பண்ணனும். உங்க மொபைல் கொஞ்ச நேரம் கொடுக்க முடியுமா?". யோசிக்காமல் கொடுத்தேன். பஸ் கிளம்பியதை வீட்டுக்கு தெரிவித்து விட்டு மொபைலை திரும்ப கொடுத்தாள்.

"தேங்க்ஸ்"

"உங்களுக்கு என்ன பிரச்சனை?" எந்த தைரியத்தில் கேட்டேன் என்று தெரியவில்லை. ஆனால் கேட்டு விட்டேன். சில வினாடிகள் அமைதியாக கழிந்தது.

"பொம்பளையா பிறந்ததுதான் பிரச்சனை" சலனமில்லாமல் ஒரு பதில் சொன்னாள்.

"என்னங்க சொல்றீங்க?"

"உண்மையைத்தான் சொல்றேன்.ஒரு பெரிய கம்பெனில வேலை செய்யுறேன். கை நிறைய சம்பளம்.என்ன பிரயோஜனம். ஒரு நாள் கூட வேலை செய்யுற இடத்தில நிம்மதியா இருந்ததில்லை. ஒரு ஆம்பளை கூட கொஞ்சம் பழகிட்டா போதும். உடனே தொட்டு பேச ஆரம்பிக்கறாங்க. பழகுனவங்களை ஒன்னும் சொல்ல முடியல. அப்படியே எதாச்சும் சொன்னாலும் ஏதோ காமெடி செஞ்ச மாதிரி கண்டுக்காம போய்டுறாங்க"
 
"எல்லாருமே அப்படி இல்லீங்க" இது போன்ற சூழலில் எல்லாரும் சொல்லும் பதிலை பொத்தாம் பொதுவாக சொல்லி வைத்தேன்.

"இப்போ என் கூட பேசுனவன் என்னோட டீம் லீட். போன வாரம் என்னை லவ் பண்றேன்னு சொன்னான். இப்படி எல்லாம் பேசுனா என் கூட பேசவே வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனாலும் என்னால நிம்மதியா இருக்க முடியல. அவனோட சண்டை போட்டா என்னோட கேரியர்தான் ஸ்பாயில் ஆகும். நான் சரி இல்லன்னு மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பிடுவான்."

"புரியுது"

"அதனால பிரச்சனைய ஸ்மூத்தா கொண்டு போவோம்னு ஹாப்பி ஃபிரண்ட்ஷிப்டேனு மெசேஜ் அனுப்பினேன். இதோ அனுப்பின உடனே i need youனு மெசேஜ் அனுப்பிட்டான். வீட்டை விட்டு 400 கிலோ மீட்டர் தள்ளி வந்து வேலை செய்யுறேன். இதெல்லாம் வீட்டுக்கு தெரிஞ்சா சென்னைக்கே போக வேண்டாம்னு சொல்லிடுவாங்க. நாளைக்கு ஆபீஸ் போனா அவன் என்ன டார்ச்சர் கொடுக்க போறான்னு தெரியல."

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலங்க. நான் வேணும்னா அவன் கூட பேசட்டா?"

"அதெல்லாம் வேணாம். இதை யாருகிட்டயாச்சும் ஷேர் பண்ணா நல்லா இருக்கும்னு தோணிச்சு. நான் சொன்னதையும் என்னையும் மறந்துடுங்க. தயவு செஞ்சு நீங்க இது மாதிரி எந்த பொண்ணு கிட்டவும் நடந்துக்காதீங்க. பொண்ணுங்களை நிம்மதியா வாழ விடுங்க. அவங்களை மதிங்க "

"நீங்க பாத்த சில பேரை வச்சு எல்லாரையும் தப்பு சொல்லாதீங்க. ஆம்பளைங்கள்ள நல்லவங்கதான் ஜாஸ்தி". சொல்லிவிட்டு கண்களை மூடி கொண்டேன். இந்த பெண்கள்தான் எவ்வளவு பாவம். வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் எத்தனை எத்தனை பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மனது கனமானது.

மறுநாள் காலை. கோயம்பேடு பஸ் நிலையத்தை பஸ் வந்து சேர்ந்தது. அவளிடம் சொல்லி கொண்டு பிரிந்து செல்லலாமா? வேண்டாம். அவளை நேருக்கு நேர் பார்க்காமலேயே பிரிந்தேன். சற்று தூரம் சென்றதும் என்னுடைய மொபைல் ஒலித்தது.

"ஹலோ. நேத்து இந்த நம்பர்ல இருந்து எங்க அக்கா கால்  செஞ்சா. அவ கிட்ட  இருந்தா கொஞ்சம் பேச சொல்லுங்களேன்?" ஒரு இனிமையான குரல் ஒலித்தது.

"நான் உங்க அக்காவோட ஃப்ரண்டுதான். உங்க பேரு என்னங்க.". நல்ல ஆண்களின் எண்ணிக்கையில் ஒன்றை குறைக்கும் முயற்சியில் இறங்கினேன்.


2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...