Friday, August 30, 2013

ஜாதிப் பேய்கள்

பின்னால் யாரோ நடந்து வரும் சத்தம் தெளிவாக கேட்டது . இந்த வழியில் நடந்து வந்தது தவறோ என்று தோன்றியது. துணைக்கு யாரும் இல்லாமல் சுடுகாட்டு வழியில் எவனாவது வருவானா? பகல்தானே என்ற அசட்டு துணிச்சலில் இப்படி வந்து சிக்கி கொண்டேனே.நாம் பயப்பட்டால் பேய்கள் நம்மை எளிதில் தாக்கி விடும் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. சற்று துணிவை வரவழைத்து கொண்டு திரும்பி பார்க்காமலேயே குரல் கொடுத்தேன் 

" நீ யாரு? நீ ஏன் என் பின்னாடியே வர்ற?"

"நான் உங்களோட நண்பன்தான். பயப்படாம திரும்பி என்னோட பேசுங்க". பதில் கூறியது ஒரு ஆண் குரல். திரும்பியவுடன் என்னை அடிக்க இந்த பேய் திட்டம் தீட்டுகிறதோ.

"நீ மனுசனா?"

"இல்லை. ஆனா மனுசங்களை விட நாங்க ரொம்ப நல்லவங்க. எனக்கு உதவுங்க ப்ளீஸ்"

"என்ன நான் உதவணுமா? உனக்கு என்ன பிரச்சனை?"

"காதல்தான் என்னோட பிரச்சனை. எங்க காதலை இந்த சுடுகாட்டுல இருக்கிற யாரும் ஏத்துகிற மாட்டேங்குறாங்க" என்றது அது. அட பாவமே. காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டவன் போலும். நிச்சயம் மூர்க்கமான பேயாக இருப்பான். நிச்சயம் திரும்ப கூடாது.

"இங்க பாரு. நீ இறந்ததும் உன்னோட காதல் முடிஞ்சு போச்சு. உன்னோட காதலி இப்ப வேற யாரையோ கல்யாணம் செஞ்சுகிட்டு சந்தோசமா இருப்பா. இப்போ நான் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. என்னை விட்டுடு."

"இல்ல. நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. தயவு செய்து திரும்பி பாருங்க.  உங்களுக்கு எல்லாமே புரியும்" இப்போது அது கெஞ்சும் குரலில் கேட்டது. பகலில் பேய்களுக்கு சக்தி இல்லை என்று யாரோ சொல்லி கேட்டிருந்தேன். அந்த நம்பிக்கையில் ஆனது ஆகட்டும்   என்று திரும்பினேன். அங்கே வெள்ளை உடையில் ஒரு இளம் வயது ஆணும், பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள். பெண் தனது கூந்தலை முகத்தின் முன் போட்டு முகத்தை மறைத்து வைத்திருந்தாள். எனக்கு இப்போது பயம் சற்று  குறைந்து இருந்தது.

"யாருப்பா நீங்க" சற்று குழைவாகவே கேட்டேன்

"தயவு செஞ்சு எங்களுக்கு உதவுங்க. நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம். நாங்க ரெண்டு பேரும் வேற வேற ஜாதிங்கறதால இந்த சுடுகாட்டுல்ல எங்க காதலை ஒத்துக்க மாட்டேங்குறாங்க."

"என்னது. செத்த அப்புறமுமா ஜாதி பாக்குறாங்க?"

"சாவு மனுசங்களுக்கு மட்டும்தான். ஜாதி எப்பவுமே சாகுறது இல்ல "

"சரி இதுல நான் எப்படி உங்களுக்கு உதவி பண்ண முடியும்"

" பகல்ல சுடுகாடுல்ல எல்லா பேயும் தூங்கிகிட்டு இருக்கும்போது நாங்க எங்க கல்லறையை விட்டு ஓடி வந்துட்டோம். ஆனா இந்த நேரத்துல்ல எங்களால இந்த சுடுகாட்டு எல்லையை தாண்டி போக முடியாது.  என்ன செய்றதுன்னு நாங்க முழிச்சுகிட்டு இருக்கும்போது நீங்க வந்தீங்க. நீங்க எங்களை கூட்டிகிட்டு பக்கத்துக்கு ஊரு சுடுகாட்ல விட்டுட்டா நாங்க பிழைச்சுக்குவோம். ப்ளீஸ்"

எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. யோசித்தேன். இவர்களை நம்பலாமா? என்  இரத்தம்  குடிக்க இது தீட்டும் சதி திட்டமா? இருக்காது. என்னை ஏதாவது செய்வதாக இருந்தால் இது நேரடியாகவே செய்து விடலாமே? நான் அந்த ஆண் பேயின் கண்களை பார்த்தேன். பாவம்! பேய் முழி முழித்து கொண்டிருந்தான்.

"சரி நான் உங்களுக்கு உதவி செய்றேன். உங்களை நான் எப்படி வெளிய கூட்டிகிட்டு போறது"

"அங்க ஒரு பாட்டில் இருக்கு பாருங்க. நாங்க ஆவி வடிவம் எடுத்து அதுக்குள்ள நாங்க போய்க்கிறோம். எங்களை அப்பிடியே நீங்க தூக்கிகிட்டு கொண்டு போய்டுங்க"

"சரி பக்கத்துக்கு ஊரு சுடுகாடுல்ல உங்களுக்கு கல்லறை இருக்காதே. எங்க தங்குவீங்க."

"அங்கே ஏதாவது ஒரு மர பொந்துல வச்சாவது இவளை காப்பாத்துவேன் சார்". அவன் சொன்ன பதிலில் சற்று உருகிவிட்டேன்.

"சரி சீக்கிரம் உள்ள போங்க"

அவர்கள் உள்ளே போய் விட்டார்கள். எடுத்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். சுடுகாட்டை விட்டு சற்று தூரம் வெளியே வந்த பின்தான் எனக்கு உரைத்தது.

"ரெண்டு  பேரும் வெளியே வாங்க". மூடியை திறந்து விட்டு அவற்றை அழைத்தேன். அவை வெளியே வந்தன.

"என்ன ஆச்சு"

"ரெண்டு பேரும் ஒரே பாட்டிலுக்குள்ள போய்டீங்க. எதாச்சும் தப்பு தண்டா செஞ்சுடீங்கன்னா?" நான் சொன்னவுடன் அந்த பெண் பேய் வெக்கப்பட்டது அவளின் அடர்ந்த கூந்தலை தாண்டியும் வெளியே தெரிந்தது.

"நீ ஏன் முடியை முன்னாடி போட்டு இருக்க?" அந்த பெண் பேயிடம் கேட்டேன்.

"சுடுகாட்ல இதான் லேட்டஸ்ட் ஃபேசன்." 

"சரி! நீங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து கல்லறையா?"

"அது எப்பிடி? நாங்க வேற வேற ஜாதி ஆச்சே. அவ  சுடுகாட்டு வடக்கு பக்கம். நான் தெற்கு பக்கம். நான் தினமும்  இவ ஏரியா பக்கம் போய் இவளை டாவடிப்பேன். ஆரம்பத்துல்ல ஓவரா அலட்டிகிட்டா " அவன் இதை சொன்னதும் அந்த பெண் பேய் அவனை குத்துவது போல் பாசாங்கு செய்தாள். சுடுகாட்டு எல்லையை தாண்டியதும் இருவரும் உற்சாக மூடுக்கு வந்து விட்டார்கள் போலும். அது சரி. அவன் சுடுகாட்டு தெற்கு பக்கம் அவன் ஏரியா என்றானே. அப்படியானால் இவன் அந்த ஜாதியா?அதிர்ச்சியாக இருந்தது.

"ஒன்னு கேக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க என்ன ஜாதி"

"நான் *********, அவ ********" 

"சரி நேரமாச்சு. நீ இந்த பாட்டிலுக்குள்ள போ. அவ இந்த பாட்டிலுக்குள்ள போகட்டும்." அவர்கள் உள்ளே போனதும் இறுக்கமாக பாட்டில்களை மூடி திரும்பி சுடுகாட்டை நடக்க ஆரம்பித்தேன்

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

2 comments:

  1. கற்பனை நன்றாகவே உள்ளது.
    கரு நம்மை அவமானத்திற்கு உள்ளாக்குகிறது.

    "சாவு மனுசனங்களுக்கு மட்டும்தான், சாதி எப்பவுமே சாகுறது இல்லை" மனதை சுடும் வரி.

    மின்னல் வேகத்தில் முன்னேறி வரும் நம் புதுமை உலகில் இன்னும் சில காலங்களில் இப்பாழாய்ப்போன் சாதி நம்பிக்கை பழக்க வழக்கங்கள் ஒழிந்துவிடும் என் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இருப்பினும் தொடர்ந்த விழிப்புணர்வு எச்சரிக்கை தேவை.

    பகிர்வுக்கு நன்றி வத்திக்குச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ..

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...