Sunday, August 25, 2013

ஆறு ஆண்கள் - ஒரு பெண்

"என்னடா! இந்த இடத்துல வேற கட்டடமே இல்ல?" என்று கேட்டேன்

"அந்த தைரியத்தில்தான் இங்க வந்து எல்லா வேலையும் செய்றானுங்க. வா உள்ள போகலாம்".

இருவரும் மெதுவாக அந்த கைவிடப்பட்ட பழைய ஃபாக்டரி உள்ளே சென்றோம். மிக மெல்லிய சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் ஆட்கள் எங்கேயும் தட்டுப்படுகின்றனரா என தேட தொடங்கினேன். இந்த 22 வயதில் என்னை நம்பி இது போன்ற வேலைகளை என்னுடைய எடிட்டர் கொடுக்கிறார் என்றால் அதற்கு காரணம் என்னுடைய திறமை. அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மனதிற்குள் உறுதி எடுத்து கொண்டேன்.

"ரேஷ்மா! உன் செருப்பு ஜாஸ்தி சத்தம் குடுக்குது பார். அதை கழட்டி போடு"

அவன் சொல்வதும் சரிதான். இந்த ஹை-ஹீலில் இருந்து வரும் சத்தமே எங்களை காட்டி கொடுத்துவிடும். செருப்பை கழட்டி விட்டு நடக்க தொடங்கினேன். 

"மொபைலை சைலன்ட்ல போட்டுட்டியா?"

"அதான் இங்க சிக்னலே இல்லியே"

"நிஜம்மாவே இங்க போதை மருந்து எல்லாம் விக்கிற மாதிரி உனக்கு தெரியுதா?"

"நமக்கு வந்த இன்பர்ஃமேசன் அதுதான்."

"யாரோ தந்த இன்பர்ஃமேசனை நம்பி இங்க வந்து நிக்கிறோம்னு தோணுது . எனக்கு என்னமோ இங்க அப்படி ஏதும் நடக்குற மாதிரி தெரியல"

"ரேஷ்மா! அங்க பாரு"

அவன் காட்டிய திசையில் பார்த்தேன். ஐந்து பேர் அமர்ந்து இருப்பது தெரிந்தது.  ஒருவன் எதையோ புகைத்து கொண்டிருந்தான். மீதி நால்வரும் தங்களுக்குள் எதையோ விவாதித்து கொண்டிருந்தனர்.

"எல்லாம் காலேஜ் பசங்க. இதை ஃபோட்டோ எடுத்து கொண்டு போனா எடிட்டர் பாராட்டி தள்ளிடுவார். எடு ரேஷ்மா "

"இன்னும் கொஞ்சம் கிட்ட போகலாம். முகம் எதுவுமே தெரியல. எப்பிடியும் பேப்பர்ல போடும்போது முகத்தை மறைச்சுடுவாங்க. அப்பிடியே எடு"

"இல்லடா. இன்னும் கொஞ்சம் கிட்ட போகலாம்"

"சொன்னா கேக்க மாட்டியே. வா"

ஒரு அடிதான் எடுத்து வைத்து இருப்போம். அங்கே ஒருவன் எங்களை கவனித்து விட்டான். "அங்கே எவனோ இருக்கான்டா" என்று அவன் கத்தியது எங்களுக்கு தெளிவாக கேட்டது.

"ஓடு ரேஷ்மா!"

ராஜேஷ் என்னுடைய கைகளை பற்றி கொண்டு ஓட தொடங்கினான். எனக்கு தூக்கி வாரி போட்டது. இங்கே வந்தது முட்டாள்தனமோ? என்னால் எப்படி இவர்களை விட வேகமாக ஓட முடியும். அவர்கள் துரத்தி பிடித்து ஆளுக்கு ஒரு அடி கொடுத்தால் போதும். இவன் சுருண்டு விடுவான். அடுத்து இவர்கள் கைகளில் சிக்க போவது நான்தான். இந்த ஆளரவம் இல்லாத இடத்தில் அவர்களுக்கு என்னை சிதைக்க போதுமான வாய்ப்புகள் இருக்கிறது. வயிற்றில் பயம் உருண்டது.


"ரேஷ்மா! பேப்பர் ஸ்ப்ரே கைல வச்சு இருக்கியா?" ஓடி கொண்டே கேட்டான்.

"இல்லடா, பேனா கத்தி மட்டும் இருக்கு"

"லூசாடி நீ? எப்பவும் கைல பேப்பர் ஸ்ப்ரே வச்சு இருக்கிறது இல்ல. அந்த 2 இன்ச் பேனா கத்தியை வச்சு எத்தனை பேரை குத்துவ?  நீ கைல எடுத்ததுமே தட்டி விட்டுடுவானுங்க"

இந்த நிலையிலும் எப்படி இவ்வளவு தெளிவாக என்னை திட்டுகிறான். அவனால் ஓட முடியவில்லை என்பது அவன் கேள்வியிலிருந்து தெளிவாக தெரிந்தது. அவனுடைய கனத்த உடம்பு அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. என் கைகளை பற்றியிருந்த அவன் கைகளை விலக்கி கொண்டான்.

"ரேஷ்மா! நீ ஓடு"

அவன் நின்று அவர்கள் பக்கம் திரும்பினான். நான் ஓடுவதை நிறுத்தவில்லை.  அவனை திரும்பி பார்த்தேன். அவன் அவர்களின் வழியில் நின்று அவர்களை தடுக்க  முயன்று கொண்டிருந்தான். பைத்தியக்காரா, வந்து விடு என்று கத்த நினைத்தேன். பயத்தில் வார்த்தைகள் வரவில்லை. ஓடி வந்தவர்கள் அவன் எதிர்த்ததும் சற்று தடுமாறினார்கள். பின்னர் சுதாரித்தனர். ராஜேஷ் வலியில் அலறும் குரல் கேட்டது.திரும்பி பார்த்தேன். கீழே கிடந்த ராஜேஷை இருவர் அடித்து கொண்டிருந்தனர். 3 பேர் என்னை துரத்தி வந்து கொண்டிருந்தனர்.

என்னால் ஓட முடியவில்லை. என்னுடைய வேகம் குறைந்ததை உணர்ந்தேன். என்னுடைய கூந்தலை யாரோ பற்றி இருப்பது  தெரிந்தது. எல்லாம் முடிந்தது. என்னுடைய அழகிய உடல் இவர்கள் கைகளில் சிக்கி விட்டது.

"சூப்பரா இருக்காடா" என்று கூறி கொண்டே அவன் என்னுடைய முகத்தை திருப்பினான். அவன் முகத்தை பார்த்தேன். பள்ளி மாணவன் போல் தெரிந்தான்.

"என்னை விட்டுடுங்க ப்ளீஸ்" அவர்களிடம் கை கூப்பினேன்.

அவன் என் கன்னத்தில் அறைந்தான். தடுமாறி கீழே விழுந்தேன். வாயில் ரத்தத்தின் சுவை தெரிந்தது.

"டேய்! நீ போய் இவ கூட வந்தவனை கட்டி போட்டுட்டு அந்த ரெண்டு பேரையும் வர சொல்லு. கார்த்திக், நீ அவ கையை பிடிச்சுக்கோ "

அவன் கூட இருந்தவர்களுக்கு கட்டளையிட்டான். நாளை என்னை பெண் பார்க்க வர போவது நினைவுக்கு வந்தது.  ராஜேஷை அடித்து கொண்டிருந்த 2 பேரும் நான் இருக்கும் இடம் நோக்கி ஓடி வருவது நிழலாக தெரிந்தது. பயத்தில் அடி வயிற்றில் இருந்து கதற தொடங்கினேன். கண்கள் இருட்டி கொண்டு வந்தது. கண்களை மூடி கொண்டேன். ஒரு உடல் என் மேல் படர்வது தெரிந்தது. என்னை சீரழிக்க போகிறார்கள். ஆயுளுக்கும் தீராத மன வலியை கொடுக்க  போகின்றனர்.

"டேய் வேணாண்டா" திடீரென  பழக்கப்பட்ட ஒரு குரல் கேட்டது. அவன் என்னிடமிருந்து விலகி கொண்டான்.

"என்னடா நல்லவன் ஆயிட்டியா. ஏதோ இதெல்லாம் நமக்கு புதுசு மாதிரி சீன் போடுற"

"இல்லடா அவ என் அக்கா" 

அதிர்ந்தேன். அட பாவி. நீயுமா அந்த கூட்டத்தில்  இருந்தாய். அப்படியே மயங்கினேன்.

நான் கண் விழித்த பொது ராஜேஷும், என்னுடைய தம்பியும் என் அருகே இருந்தனர். ராஜேஷின் முகம் வீங்கி இருந்தது.

"சாரி அக்கா! அவங்க போய்ட்டாங்க. வா நாம வீட்டுக்கு போகலாம்". இருவரும் என்னை தூக்கி விட்டனர்.

"இங்க நடந்ததை வெளிய சொல்லிடாத. அப்படியே மறந்திடு"

"என்னடா இது. நீ இப்பிடிப்பட்ட ஆளா?" கோபத்துடன் அவனை கேட்டேன்

"என் இப்ப கத்துற. அதான் ஒன்னும் ஆகலியே. இந்த மாதிரி இடத்துக்கு வந்தா இப்பிடித்தான் எதாச்சும் நடக்கும்"

"இந்த இடத்துல நான் இல்லாம வேற யாராச்சும் இருந்து இருந்தா?"

அவன் பதில் சொல்லவில்லை.

"ரேஷ்மா! இங்க ஒன்னும் பேச வேண்டாம். வீட்டுக்கு போகலாம் வா" என்றான் ராஜேஷ்.

"இல்ல ராஜேஷ். இது சரி இல்ல. இந்த இடத்துல வேற யாராச்சும் இருந்து இருந்தா?"

"சரி! என்னதான் செய்யலாம்னு சொல்ற."

நான் பதில் சொல்லவில்லை. மெதுவாக பாக்கெட்டில் இருந்த பேனா கத்தியை எடுத்தேன். மின்னல் வேகத்தில் பாய்ந்து  அதை என்னுடைய தம்பியின் கழுத்தில் வைத்து அறுக்க தொடங்கினேன். அதை சற்றும் எதிர்பார்க்காத என்னுடைய தம்பியின் கழுத்திலிருந்து ரத்தம் கொட்ட தொடங்கியது.


3 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...