Tuesday, November 12, 2013

மனித நகல்

"இது வரைக்கும் நான் பழகுன எந்த பொண்ணும் இப்பிடி என்னை வீடு வரைக்கும் கூட்டிகிட்டு வந்தது இல்லை கவிதா."

"இதுக்கு எதுக்கு இப்பிடி எமோஷன் ஆகி பீல் பண்ற. எங்க அப்பா வீட்ல இருக்குறப்பதான கூட்டிகிட்டு வந்தேன்." சொல்லிவிட்டு சிரித்தாள் கவிதா.

"உங்க அப்பா எங்க?"

"மேல லேப்ல இருக்கார். இரு அவரை கீழ கூப்பிடுறேன்."

"என்னை பார்த்தா கோவிச்சுக்க மாட்டாரா?"

"அவர் உன்னை பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவார். இரு வரேன்" 

கவிதா துள்ளி துள்ளி மாடிப்படி ஏற தொடங்கினாள். எனக்கு நிலை கொள்ளவில்லை. வீட்டுக்கு கூட்டி வருகிறாள். அவளின் அப்பா என்னை பார்த்தால் சந்தோசப்படுவார் என்கிறாள். நிச்சயம் நட்பை மீறிய காதல் இது. கல்லூரி முடித்ததும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியதுதான்.

"கோபி! மேல வா." அவளின் குரல் மட்டும் கேட்டது.

மேலே ஏன் கூப்பிடுகிறாள். விருந்தினரை பார்க்க அவள் தந்தை கீழே வர மாட்டாரா? சிறிது தயங்கினேன். சில வினாடிகளில் எனக்கு புரிந்தது. அவளின் தந்தை வீட்டில் இல்லை. பொய் சொல்லி என்னை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கிறாள். ஹாலில் வேண்டாமென்று என்று என்னை தனியாக மேலே கூப்பிட்டு என்னை.... மெதுவாக படியை நோக்கி நடந்தேன்.

"இன்னும் என்ன பண்ற?"

"வந்துகிட்டு இருக்கேன். வீட்டு கதவு திறந்து இருக்கு."

"இங்க இருந்து ரிமோட்ல லாக் செஞ்சுடறேன். நீ வா." என்றாள். இத்தனை திட்டம் போட்டவள் கதவை பூட்டவா மறப்பாள். சயன்டிஸ்ட் மகளாயிற்றே. வேகமாக படி ஏறி மாடியை அடைந்தேன்.

"அப்பா அந்த ரூம்ல இருக்கார்." 

"இருக்காரா?" ஏமாற்றத்தை குரலில் காட்டாமல் கேட்டேன்.

"ஆமா வா"

அந்த அறையினுள் அழைத்து சென்றாள். அறை முழுக்க எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் இறைந்து கிடந்தன. நடுவில் ஒரு தாடி வைத்த மனிதர். அவர்தான் கவிதாவின் தந்தையாக இருக்க வேண்டும். என்ன மனிதரோ. எதிர்கால மாப்பிளையை இங்கே வைத்தா சந்திப்பது.

"வெல்கம் மேன்." அவர் குரல் ஏன் சிந்தனையை கலைத்தது.

"குட் மார்னிங் சார்"

"என்ன கவிதா. தைரியமான ஆளுதானே இவரு." கவிதாவின் பக்கம் திரும்பி கேட்டார்.

"எஸ் டாடி"

"அவரை என்ன செய்ய போறேன்னு சொல்லிட்டயா?"

"இன்னும் இல்லை"

"அப்போ நானே சொல்லிடறேன்"

தந்தையும் மகளும் ஏதோ பேசி கொண்டனர். என்னை வைத்து என்ன செய்ய போகின்றனர் இவர்கள். எனக்கு குழப்பமாக இருந்தது. தாடிகாரர் என்னை நோக்கி திரும்பினார்

"யங் மேன்! இப்போ நாங்க உன்னை அந்த மிஷின் உள்ள அனுப்ப போறோம்." அவர் ஒரு ஆளுயர பெட்டியை கை காட்டினார்.

"என்ன சார் அது?"

"அது என்னோட20 வருஷ ஆராய்ச்சி. க்ளோனிங் மிஷின்"

"புரியல சார்."

"புரியுற மாதிரி சொல்றேன். அந்த மிஷின் ஒரு ஜெராக்ஸ் மிஷின் மாதிரி. ஆனா அது பிரதி எடுக்கபோறது மனுசங்களை. நீ இப்போ அதுக்குள்ள போனா உன்னை மாதிரியே இன்னொரு  காபி உருவாக்கும்." சீரியஸ் முகத்துடன் விளக்கினார். அட பாவிகளா. அப்பாவும், மகளும் திட்டமிட்டது இதற்குத்தானா.

"சார்! விளையாடாதீங்க . அதெல்லாம் சாத்தியமே இல்லை"

"என்னோட அபார மூளையோட சக்திக்கு முன்னாடி எதுவுமே அசாத்தியம் இல்லை."

"சரி! மனுசங்களை பிரதி எடுத்து என்ன யூஸ்?"

"பிரதியா வர மனுசங்க பிராய்லர் கோழி மாதிரி. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திக்கலாம்."

"க்ளோனிங் ஆராய்ச்சியையே தடை செஞ்சாச்சுன்னு படிச்சு இருக்கேன்"

"எந்த சட்டமும் இந்த ஆராய்ச்சியை தடுக்காது. ஏன்னா உருவாக போற பிரதிக்கு உணர்ச்சிகள் கிடையாது. அந்த மனிதன் ஒரு பொம்மை மாதிரி. அதுக்கு பசிக்காது, வலிக்காது, காதல் கிடையாது. நான் அதுக்காக நகலோட  மூளையை மட்டும் கொஞ்சம் மாத்தி இருக்கேன்."

"நேரம் ஆகுது. உள்ள போ" என்றாள் கவிதா.

"கவிதா! எனக்கு இதுல இஷ்டம் இல்லை"

"எனக்காக ப்ளீஸ்" குழைந்தாள். இதை மறுப்பது எந்த ஆணுக்கும் கஷ்டம்.

"சரி போறேன். ஆனா இது வரை எத்தனை பேரை நகல் எடுத்து இருக்கீங்க"

"நீதான் முதல் ஆளு. இது வரை ரெண்டு பூனையை மட்டும் நகல் எடுத்து இருக்கோம்."

"அடிப்பாவி. உங்க அப்பா நோபல் வாங்க என்னை வைச்சு சோதனை செய்யணுமா. நீயும் உங்க அப்பாவும் உள்ள போய் டெஸ்ட் பண்ண வேண்டியதுதான?"

"புரியாம பேசாத. இதை ஆபரேட் பண்றது எனக்கும் எங்க அப்பாவுக்கும் மட்டும்தான் தெரியும். தவிர எதாச்சும் பிரச்சினை வந்தா மிசின் ஓடும்போது பிரச்சினை வந்தா நாங்கதான் சரி செய்யணும்."

"மிசின்ல பிரச்சினை வருமா. என்னை கொல்றதுன்னே முடிவு செஞ்சுட்டியா?"

"உன்னோட பேரு சரித்திரத்துல வர வேணாமா?"

"நான் போய் சேந்த பின்னாடி எதுல வந்தா என்ன?" மூர்க்கமாக கத்தினேன்.

"ஓகே! இப்போ நீ உள்ள போகலன்னா எங்க அப்பா அந்த லேசர் கன்னை  உன் மேல யூஸ் செய்வார். அது உன்னோட மூளையை போய் தாக்கினதுக்கு அப்புறம் நீ உணர்ச்சியே இல்லாம போயிடுவ. இப்போ சொல்லு." அவள் சொல்லி முடிக்கவும் அவளின் தந்தை துப்பாக்கி போன்ற ஒன்றை என்னை நோக்கி நீட்டினார்.

"வேணாம் வேணாம் போறேன்" என்று என்னை அறியாமல் கத்தினேன். குறைந்த பட்சம் அதிலாவது உயிர் பிழைக்க சிறிது வாய்ப்பு உள்ளது.

அவர்கள் என்னை அந்த பெட்டிக்குள் வைத்து பூட்டினார்கள். சில நிமிடங்கள் கழித்து ஒளி கீற்றுகள் என் மேல் வலமும் இடமும் பாய்ந்தன. எனக்கு கண் கூசியது. திடீரென மின்சாரம் தாக்கியது போல தூக்கி எரியப்பட்டேன்.

"டாட்! சக்சஸ். பிரதி கிடைச்சாச்சு." கவிதா கத்தி கொண்டே என்னை நோக்கி ஓடி வந்தாள்.

"பாவி மகளே! அது பிரதி இல்லடி. அந்த மிசின் என்னைத்தான் வெளியே தள்ளி இருக்கு" என்று சொல்லி கொண்டே வெளியே ஓடினேன். வீட்டு கதவு தானாக திறந்து கொண்டது.

ரண்டு நாள்  விடுமுறை எடுத்து கொண்டு கல்லூரிக்கு திரும்பினேன். உணவு இடைவேளையின்போது கவிதா என்னை நெருங்கி வந்தாள். கிராதகி.இப்போது என்ன திட்டமோ.

"சாரிடா! அன்னைக்கு மிசின்ல சின்ன தப்பு நடந்து போச்சு"

"போங்கடி நீங்களும் உங்களோட டப்பா மிசினும். "

"ரொம்ப கோபப்படாத. கொஞ்சம் கரண்ட் கூட குடுத்து இருந்தா அன்னைக்கு உன்னோட பிரதி கிடைச்சு இருக்கும். இங்க பாரு. அன்னைக்கு அந்த மிசின் உள்ள இது கிடைச்சது." 

அவள் காட்டிய பார்சலை பிரித்து பார்த்தேன். நகல் எடுத்த அன்று நான் அணிந்து இருந்த சட்டை போலவே ஒரு சட்டை இருந்தது. எடுத்து பிரித்து பார்த்தேன். சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் இல்லை.

"பார்த்தியா. சின்ன தப்புதான். சட்டை நகல் கிடைச்சு இருக்குது பாரு."

"சரிமா! நீங்க பெரிய ஆளுங்கதான். என்னை விடுங்க"

"சரி தொந்தரவு பண்ணல. ஆனா உனக்கு எப்பவாச்சும் பேன்ட் எடுக்கணும்னு தோணிச்சுனா துணி கடைக்கு போகாத. எங்க வீட்டுக்கு வா. இன்னொரு முறை..."

நான் ஓட தொடங்கினேன்.



1 comment:

  1. நல்ல கதை. சுவாரசியமாக இருந்தது.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...