Wednesday, November 13, 2013

நான், செல்வராகவன்

"காதல் கொண்டேன்" படம் பார்த்தபோது செல்வராகவன்  மேல் பெரிதாக அபிப்பிராயம் ஏதும் வரவில்லை.அதற்கு அந்த படம் ஏற்கனவே வெளிவந்த சில படங்களின் சாயலில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். கஸ்தூரிராஜா மகன் என்ற அளவில் மட்டுமே அவர் நினைவில் இருந்தார்.அவரின் அடுத்த படத்தை பார்த்து அவரின் ரசிகனாக மாற போகிறேன் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

அதன் பின் சில நாட்கள் கழித்து அவரின் '7G ரெயின்போ காலனி' படம் வெளிவந்தது.  படத்தை பற்றிய விமர்சனங்கள் நேர்மறையாக இருந்ததால் அந்த படத்தை சென்று பார்த்தேன். அந்த படத்தின் இறுதி காட்சி ஏற்படுத்திய பாதிப்பு மறைய இரண்டு நாள் ஆனது. அதுவும் நான் பார்த்தது திரைப்படம்;   உண்மை இல்லை என்று எனக்குள் நானே திரும்ப திரும்ப சொல்லி கொண்டதாலேயே  அத்தனை விரைவாக என்னால் மீள முடிந்தது. இத்தனைக்கும் அந்த படத்தின் கதை படம் பார்க்கும் முன்பே எனக்கு தெரியும். ஒருவேளை கதை தெரியாமல் படம் பார்த்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தெரியவில்லை.

இப்படி '7G ரெயின்போ காலனி'  செல்வராகவன் மேல் எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி விட்டு இருந்தது. படம் நெடுக கதாபாத்திரங்கள் உடனேயே பயணிக்க வைத்து, திரையில் நடக்கும் காட்சிகளை உண்மை என நினைக்க வைத்து, இறுதியில் நம்மையே படத்தின் கதாபாத்திரங்களாக உணர வைத்த அவரின் திறமை அவரை ஒரு ஜீனியசாக என்னை நினைக்க வைத்தது.  மனித உணர்வுகளை இத்தனை நுணுக்கமாக புரிந்து வைத்து இருக்கும் இவரின் எந்த படத்தையும் தவற விட கூடாது என முடிவு செய்தேன்.


அடுத்து செல்வராகவன் எடுத்த படம் 'புதுப்பேட்டை'. படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே படத்தை மிகவும் எதிர் பார்க்க ஆரம்பித்து விட்டேன். படம் வெளிவந்த முதல் நாளே அடித்து பிடித்து டிக்கெட் எடுத்து திரை அரங்கினுள் உற்சாகமாக சென்று அமர்ந்தேன். தனுஷ் ' தொண்டையில ஆப்ரேசன்' என்ற வசனத்தை பேசியதும் உற்சாகம் மேலும் அதிகரித்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாய் வடிய தொடங்கி படம் முடியும்போது சுத்தமாக இல்லாமல் போனது. இருந்தபோதும் 'படம் எப்படி?' என்று கேட்டவர்களிடம் 'நல்லாத்தான் இருக்கு. என்ன கொஞ்சம் மெதுவா போகுது' என்றே பதில் கூறினேன். செல்வராகவன் எங்கேயோ தவற விட்டுவிட்டார். அடுத்த படத்தில் சரி செய்து விடுவார் என எனக்கு நானே சமாதானம் சொல்லி கொண்டேன்.

'புதுப்பேட்டை' படத்தின் விமர்சனங்கள் நல்ல விதமாக இல்லாமல் போனதும் செல்வராகவன் தெலுங்கு படம் எடுக்க போய் விட்டார். இவர் திரும்ப வராமல் போனால் தமிழ் சினிமா ஒரு நல்ல இயக்குனரை இழந்து விடும் என்று எண்ணி வருத்தம் கொண்டேன். நல்ல வேளையாக(?) அவர் தமிழுக்கு திரும்பி விட்டார். 'ஆயிரத்தில் ஒருவன்' என்று ஒரு படம் அறிவித்தார். இதற்கு இடையில் அவர் இயக்கிய தெலுங்கு படம் 'யாரடி நீ மோகினி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது. சாதாரண கதை என்றாலும் நன்றாகவே இருந்தது.

அதிக நாட்கள் தயாரிப்பில் இருந்த பின் 'ஆயிரத்தில் ஒருவன்' வெளியானது. படம் எனக்கு பிடித்தே இருந்தது. இது வரை பார்க்காத ஒரு களம்; புதுமையான காட்சிகள் என்று சிறப்பாகவே செய்து இருந்தார். ஓரளவு திருப்தியுடன் திரை அரங்கை விட்டு வெளியே வரும்போது 'குப்பை மாதிரி படம் எடுத்து இருக்கான்' என்று ஒரு பெண் விமர்சித்ததை கேட்டேன். அந்த பெண்ணின் கருத்து அன்றைக்கு பெரும்பாலான தமிழர்களின் கருத்தோடு ஒத்து போனது. படம் இரண்டாம் பாகம் சரி இல்லை என்று பெரும்பாலோனோர் விமர்சித்து இருந்தனர். படத்தின் கதை பெரிய அளவில் சர்ச்சைகளையும் கிளப்பியது.

அதன் பின் 'ஆயிரத்தில் ஒருவன்- இரண்டாம் பாகம்' எடுக்க செல்வராகவன் கிளம்பியயதாக நினைவு. ஆனால்அந்த முயற்சியை அவர் கை விட்டு விட்டார். ஒரு பேட்டியில் அந்த படம் தற்போதைய சூழலில் ஓடாது என்று எண்ணியதாலேயே கை விட்டு விட்டதாக கூறி இருந்தார். அவர் எண்ணியதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. நிச்சயம் முதல் பாகம் பார்த்தவர்களில் பாதி பேர் இரண்டாம் பாகம் பார்க்க வந்து இருக்க மாட்டார்கள். இருந்தபோதிலும் முதல் பாகம் பாதியில் நின்றதால் அந்த கதையின் முடிவு என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் என்னை விட்டு போகவில்லை. யாரேனும் செல்வராகவனின் நண்பர்கள் இதை படித்தால் அவரிடம் கதையை கேட்டு சொல்லுங்கள்.

'மயக்கம் என்ன' செல்வராகவனின் அடுத்த படம். வழக்கமான செல்வராகவன் படங்களை போலவே இதிலும் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை  இருந்தாலும்   படம் பார்க்கும்போது   எதையோ எடுக்க நினைத்து அவசர கோலத்தில் எதையோ எடுத்தது போல எண்ணம் வருவதை தடுக்க இயலவில்லை. இதில் மிக மெதுவாக செல்லும் காட்சிகள் வேறு. இருந்த போதும் சில காட்சிகளில் வழக்கமான செல்வராகவன் டச் காண கிடைத்தது. இருந்த போதிலும் பழைய '7G' செல்வராகனை இனி காணவே முடியாதோ என எனக்குள் சந்தேகம் வர தொடங்கியது இந்த படத்திற்கு பின்தான்.

இப்போது 'இரண்டாம் உலகம்' அடுத்த வாரம் வெளியாக போகிறது. பாடல்கள், இரண்டு டீசர்கள் வெளியாகி விட்டன. டீசர்களை பார்த்தால் ஹாலிவுட் படம் போல் முயன்று இருப்பார் என தோன்றுகிறது. அனிருதின் பின்னணி இசையில் இரண்டாவதாக வந்த டீசர் முதல் டீசரை விட சிறப்பாக இருக்கிறது. பாடல்களும் நன்றாகவே இருக்கின்றன. '7G' யில் நான் பார்த்து வியந்த செல்வராகவன் இந்த படத்தின் மூலம் மீண்டும் தான் ஒரு ஜீனியஸ் என்று நிரூபிப்பார் என நம்புகிறேன். பொறுத்து இருந்து பார்க்கலாம்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...