Friday, January 24, 2014

கொஞ்சம் மாத்தி யோசி!

ன்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கிளம்பியபோது அவன் மிகவும் களைத்து போயிருந்தான். இன்னும் இரண்டு நாட்கள் வீட்டில்அவனை தவிர யாரும் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் அவனை மேலும் சோர்வு கொள்ள செய்தது. போதாக்குறைக்கு மழை வேறு சேர்ந்து கொண்டு அவனை மிகவும் சிரமப்படுத்தியது.   உடல் அசதி மிகுந்து இருந்ததால் நேராக படுக்கைக்கு சென்று விட முடிவு செய்துகொண்டான்.

மூடி கிடந்த கதவை திறந்து, வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தியவனால் கதவை சரியாக மூட முடியவில்லை. அந்த ஒற்றை கதவு நிலையில் பொருந்த மறுத்தது. தன்னுடைய பலத்தை எல்லாம் கொடுத்து மீண்டும் தள்ளி பார்த்தான். நிலைக்கு மயிரிழை தூரம் முன் நின்று கொண்டு நகராமல் அடம் பிடித்தது. மழைக்கு கதவு இறுகிவிட்டது என்று அவனுக்கு தோன்றியது. மீண்டும் தனது மொத்த பலத்தையும் பிரயோகித்து கதவை தள்ள முயன்று தோற்றான்.

அவனுக்கு தூக்கம் கண்ணை சுழற்ற ஆரம்பித்தது. கதவை மூடாமல் தூங்குவது பாதுகாப்பில்லை என்று உணர்ந்தான். வேறு வழியின்றி பாயை எடுத்து கொண்டு வந்து தன் கால்களால் கதவுக்கு முட்டு கொடுத்து கொண்டு தூங்க ஆரம்பித்தான். வீட்டினுள் பஞ்சு மெத்தை இருக்கும்போது வாசலுக்கு நேரே படுத்து தூங்கும் தன் தலை விதியை நொந்து கொண்டான்.




மறு நாள் விடிந்ததும் எழுந்து முதல் வேலையாக கதவை மூட முடிகிறதா என்று பார்த்தான். ஒன்றும் வேலைக்காவது போல தெரியவில்லை. கதவை மூடாமல் அலுவலகம் செல்ல இயலாது. இப்போதிருக்கும் சூழ்நிலையில் அலுவலகத்தில் விடுப்பு எடுப்பதும் கடினம். என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் குழம்பி தொலைபேசியில்  அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டான். பின்னர் தனது நண்பனை தொலைபேசியில் அழைத்து அவனுக்கு தெரிந்த ஆசாரியின் தொலைபேசி எண்ணை வாங்கினான்.  மதியம் அலுவலகம் செல்லும்போது தன்னை கசக்கி பிழிய போகின்றனர் என்ற பயம் அவனுக்கு வயிற்றில் புளியை கரைத்தது .

ஒரு மணி நேரத்தில் வருவதாக சொன்ன ஆசாரி சொன்னது போலவே வந்து விட்டார்.  அவரிடம் கதவை காட்டி தன் பிரச்சினையை சொன்னான். அவர் கதவை உள்ளே இருந்து மூடி பார்த்தார். அவராலும் மூட முடியவில்லை. பின் வெளியே சென்று வெளிப்  பக்கமாக மூட முயன்றார். பயனில்லை.

"மழையில நல்லா இறுகிடிச்சு"

"தம்பி எங்க வேலை செய்றேன்னு சொன்னீங்க?" 

"கம்ப்யூட்டர் கம்பெனியில"

"நினைச்சேன்." 

"சீக்கிரம் சரி பண்ணிடுங்க. எவ்வளவு செலவு ஆகும்."

"500 ரூபா கொடுங்க"

"சரி வேலைய ஆரம்பிங்க"

அவன் சொன்னதும் அவர் குனிந்தார். கதவுக்கும், நிலைக்கும் இடையே இருந்த அந்த சிறிய கல்லை எடுத்து தூர எறிந்தார். கதவை மூடினார். அது அழகாக நிலையில் பொருந்தி நின்றது.

"சரி வேலை முடிஞ்சது. பணத்தை எடுங்க"

"என்னங்க அநியாயமா இருக்கு. ஒரு கல்லை எடுத்து போட்டதுக்கு இத்தனை காசா?"

"எடுத்து போட்டதுக்கு மட்டும் இல்ல. கல்லை பார்த்ததுக்கும். பிரச்சனை பண்ணாம காசை எடுங்க"

அவன் வெறுப்போடு பணத்தை எடுத்து நீட்டினான்.

"தம்பி! நேத்தே நீங்க வெளிய போய் கதவை தள்ளி பார்த்து இருந்தா அந்த கல்லு உங்க கண்ணுல பட்டு இருக்கும். உள்ளேயே நின்னுகிட்டு தள்ளிகிட்டே இருந்ததால கதவு அந்த கல்லை மறைச்சுகிட்டு, கடைசிவரை கல்லு உங்க கண்ணுல படல."

"உண்மைதான். பிரச்சனை வந்ததும் அது பெருசாதான் இருக்கும்னு  நெனச்சுகிட்டேன். பதட்டப்படமா வேற மாதிரி யோசிச்சா இதை சுலபமா தீர்க்க முடியும்னு நான் நினைக்கல. என்ன பண்றது? பிரச்சினை வந்தா கவலை வருது. அது சிந்திக்க விடாம செஞ்சுடுது. பெரும்பாலான பிரச்சனைகள் லேசா தீர்க்க கூடியதுதான். அதை நம்ம மனசுதான் பெருசாக்கி நம்மை பயமுறுத்தி பிரச்சினையை  தீர்க்க விடாம செஞ்சுடுது."

"இது உங்க பிரச்சினை மட்டும் இல்ல. பெரும்பாலான மனுசங்க பிரச்சினை. இந்த பணத்தை பிடிங்க. இது எனக்கு வேண்டாம்."

பணத்தை அவன் கையில் திணித்து விட்டு நடக்க தொடங்கினார் ஆசாரி.  

4 comments:

  1. ஆசாரி மூலம் சொல்ல வந்த கருத்து அருமை... உண்மை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நிஜம்தான்! பிரச்சனை கல் மாதிரி. கண்ணுக்கு நேரா வச்சு பார்த்தா மலைப் போல தெரியும். தூர வச்சுப் பார்த்தா சின்னதா தெரியும்ன்னு சொல்வாங்க

    ReplyDelete
  3. அவர் ஆசாரி இல்லே,படிப்பினை தந்த ஆச்சாரி!
    த ம 2

    ReplyDelete
  4. நல்ல படிப்பினை தரும் கதை சொன்ன விதம் ரசிக்கும்படி !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...