Friday, February 14, 2014

ஒரு காதலர் தினத்தில்

ந்த மதிய பொழுது தந்த சோம்பலில் அலுவலகம் மந்தமாக இயங்கி கொண்டு இருந்தது. ரமேஷின் கைகள் நடுங்கி கொண்டு இருந்தன.

"ரொம்ப பயமா இருக்குடா."  அவன் பயம் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

"பயப்படுறவன் எல்லாம்  தூரத்துல நின்னு வெறிச்சு பாத்துட்டு ஓடிடணும். கிட்ட யாருமே இல்ல. இதான் சரியான நேரம். சீக்கிரம் போய் வேலையை முடிச்சிடு." 

"நீ என் கிட்ட வந்து நின்னுக்கோ.  அவ ஒரு வேளை சத்தம் போட ஆரம்பிச்சான்னா.."

"டேய்! அவ படிச்ச பொண்ணு. பிடிக்காட்டி முகத்துக்கு நேரா சொல்லிடுவா. பயப்படாம போ."

"இல்லடா. அது..."

"டேய்! நீதான அவ பச்சை டிரஸ் போட்டு இருக்குறதே உனக்காக அப்பிடின்னு சொல்லி என்னை கூட்டிகிட்டு வந்த."

"அவ என் கூட நல்லா பேசுறா. பழகுறா. ஆனா காதல்னு ஆரம்பிச்சா தப்பா எடுத்துகிட்டா"

"தப்பாதான் எடுத்துப்பா. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்."

நான் சொன்னதும் முறைத்தான்.

"சரி விடு. நான் கேக்குறதுக்கு  பதில் சொல்லு, காலைல இருந்து உன் கூட பேசுனாளா?"

"ஆமா. ஆனா தினமும் எப்படியும் என் கூட பேசிடுவா"

"அடுத்த கேள்வி. பேசும்போது அடிக்கடி சிரிப்பாளா?"

"அவளுக்கு எப்பவுமே சிரிச்ச முகம்தான்."

"ம்ம். அப்போ ரொம்ப சரி. அவ உன்னை காதலிக்கிறா. பாரு. உன் கூட தினமும் பேசுறா. அதுவும் சிரிச்சுகிட்டே பேசுறா. காதலர் தினத்தன்னிக்கு பச்சை டிரஸ் போட்டுகிட்டு வந்து உன் முன்னாடி நிக்குறா. இதுக்கு மேல ஒரு பொண்ணு என்னதான் பண்ண முடியும். இது கூட புரியலையா உனக்கு." 

நான் சொல்லிய காரணங்கள் எனக்கே மிகையாக தெரிந்தன. இருந்தாலும் வாழ்வில் முதல் முறையாக ஒரு ஆண் பெண்ணிடம்  காதல் சொல்லும் காட்சியை காணும் ஆவலில் அவனை தூண்டி விட்டேன்.

"அப்போ போகலாமா?"

"போடா மடையா. "

"போறேன். ஆனா அங்க நான் பேசுறது இங்க உனக்கு கேக்குமா?"

"இப்போ நாம பேசுற மாதிரி பேசுனா கேட்காது. கொஞ்சம் சத்தமா பேசுனா கேக்கும்"

"அப்போ ஒரு வேளை  அவ என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டா வெளிய சொல்லி என்னை அசிங்கப்படுத்த கூடாது."

"என்னடா நீ! உன்னை எப்பிடி நான்"

நான் சொல்ல வந்ததை கேட்காமல் அவன் இருக்கையில் இருந்து எழுந்து தயங்கி தயங்கி அவளை நோக்கி முன்னேறினான். 

"டேய்! காதலிக்க போறவன் மாதிரி போ. கற்பழிக்க போறவன் மாதிரி போகாத."

திரும்பி முறைத்து விட்டு நடந்தான்.


"ஸ்வாதி!" அவன் கூப்பிட்டது எனக்கு துல்லியமாக கேட்டது.

நான் காதுகளை தீட்டி கொண்டேன்.

"சொல்லுங்க ரமேஷ். என்ன வேலை இல்லையா?"

"வேலை இருக்கு. அதான் இந்த பக்கம் வந்தேன்."

அவன் உளறும் போதுதான் புத்திசாலித்தனமாக பேசுவான் போல.

"என்ன வேலை?"

"உங்க டிரஸ் நல்லா இருக்கு."

"தேங்க்ஸ்"

"பிப்ரவரி 14 அன்னைக்கு பச்சை கலர் டிரஸ்ல வந்து இருக்கீங்க"

"ஏன்? அதனால என்ன?"

"இல்ல. அப்பிடி வந்தா காதலிக்க ரெடி அப்பிடின்னு சொல்லுவாங்க"

"அப்பிடியா? அப்போ நீங்க என்ன கலர் டிரஸ்ல வந்து இருக்கீங்க?"

"இது ப்ளூ கலர் ஸ்வாதி. ஏன் உங்களுக்கு தெரியலயா?"

எனக்கு எரிச்சலாக வந்தது. எல்.கே.ஜி வகுப்பா எடுக்கிறான்?

"எனக்கு எப்பிடிங்க தெரியும். எனக்குதான் கடவுள் அந்த அதிர்ஷ்டத்தை தரலியே"

"என்ன சொல்றீங்க?"

"ரமேஷ்! இந்த விஷயம் இங்க எல்லாருக்குமே தெரியும். உங்களுக்கு மட்டும் தெரியாதா? எனக்கு நிறத்தை பிரிச்சு பார்க்க முடியாது. நிறக்குருடு. மஞ்சள், பச்சை, சிகப்பு, ஆரஞ்ச் எல்லாமே எனக்கு ஒண்ணுதான். பரம்பரை வியாதி . எனக்கு இன்னும் சரியான மாப்பிள்ளை கிடைக்காததுக்கு இது கூட ஒரு காரணம்."

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எழுந்து அவள் முகத்தை பார்த்தேன். எப்போதும் போல அதே சிரித்த முகம் . ரமேஷை பார்த்தேன். அவன் முகத்திலும் அதிர்ச்சி. ரமேஷ்! திரும்பி வந்து விடு. அவள் உன்னை காதலிக்கவில்லை. அவளின் சிரிப்பு, உடை எதுவுமே உனக்காக இல்லை. எழுந்து சென்று அவனை அழைத்து வந்து விடலாமா என்று யோசித்தேன்

"சாரி சுவாதி. கஷ்டப்படுத்திட்டேன்"

"இதுக்கு எதுக்கு சாரி? 

"சரி! அப்போ ஐ லவ் யூ"

"ரமேஷ்"

"சீரியசாதான் சொல்றேன். கொஞ்ச நாள் காதலிக்கலாம். நவம்பர்ல கல்யாணம் செஞ்சுக்கலாம்."

அவள் பதில் சொல்லாமல் குனிந்து கொண்டாள். ரமேஷ் திரும்பி வந்து விட்டான். 

நாட்கள் உருண்டு ஓடிய பின் அந்த வருடம் நவம்பரில் ரமேஷ்-சுவாதி திருமணத்துக்கு சென்று இருந்தேன். அடுத்த ஆறு மாதங்களில் அவர்கள் இருவருமே வேறு வேலைக்கு சென்று விட்டார்கள்.நான்கு வருடங்களுக்கு பின் ரமேஷை பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். ஒரு ஆண் குழந்தை இருப்பதாக சொன்னான். அந்த குழந்தைக்கு நிறத்தை பிறித்தறிவதில் எந்த  குறைபாடும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்களாம் .

"காதலர் தினத்தன்னைக்கு காதலை சொன்னதால பெரிய வெற்றி போல" என்றேன்.

"காதலர் தினம் எல்லாம் பைத்தியகாரத்தனம். காதலுக்கு நாள், கிழமை எல்லாம் இல்லை. உண்மையான காதலர்களுக்கு எல்லா நாளும் கொண்டாட்டமான நாள்தான்" என்றான்.

அனுபவப்பட்டவன் ஆயிற்றே. சொல்லுவது சரியாகத்தான் இருக்கும்.1 comment:

  1. அன்பு தினம் - என்றும் வேண்டும்...
    தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

    அன்பு தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...