Saturday, February 22, 2014

பாகிஸ்தான் உளவாளி

ளவாளிகளை பற்றி தெரிந்து கொள்வது ஆர்வமூட்டக்கூடிய ஒரு விஷயம். எதிரிகளின் கூடாரத்துக்குள்ளேயே ஊடுருவி அவர்களை பற்றி தகவல் திரட்டுபவர்கள் எத்தனை பெரிய வீரர்களாய் இருக்க வேண்டும். அது மட்டுமா? அவர்களிடம் நவீன தொழில் நுட்பங்கள் அனைத்தும் இருக்கும். பேனாவுக்குள் இருந்து  துப்பாக்கி குண்டுகள் பாயும். சட்டை பட்டனில்  கேமரா வைத்து இருப்பார்கள். இப்படி ஜேம்ஸ்பாண்ட் முதல் கமலஹாசன் வரை நாம் பார்த்த அத்தனை உளவாளிகளும் நம்மை வியக்க வைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் எங்கள் ஊரில் ஒரு வித்தியாசமான மனிதர் சுற்றி திரிந்தார். பார்த்தால்அறுபது வயது மதிக்க கூடியவராக இருந்தார். நீண்ட வெள்ளை தாடி, சிகப்பு பேண்ட், நீண்ட மஞ்சள் சட்டை, முதுகில் ஒரு பெரிய மூட்டை இவற்றோடு ஊரை சுற்றி வருவார். தோற்றத்தை வைத்து அவர் எந்த ஊர் என்று கணித்து சொல்ல முடியாது. தமிழர் போலவும் தெரிவார்; வட இந்தியர் போலவும் தெரிவார்.

அவரின் உடையின் நிறங்களும், அவர் முதுகில் இருந்த மூட்டையும் ஊரில் இருந்த அனைவரின் கவனத்தையும் எளிதில் அவர் மேல் திருப்பி விட்டது. பிச்சைக்காரர் போல தெரிந்தாலும் அவர் யாரிடமும் பிச்சை கேட்டு சென்றதில்லை. அவர் எங்கே தங்குகிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. அதை விட பெரிய ரகசியமாக அவர் வைத்து இருந்த மூட்டை இருந்தது. அதற்குள் அவருடைய துணிமணிகள் இருக்கிறது என சிலர் நினைத்து கொண்டு இருந்தார்கள். இன்னும் சிலரோ அவர் அதில் அவர் குப்பைகளை சேகரித்து விற்று காசு சம்பாதிக்கிறார் என்றார்கள்.


இப்படி ஊரறிந்த மர்ம மனிதராக இருந்த அவரை சில நாட்களாக காணவில்லை. எங்கே சென்றார் அவர் என அனைவரும் யோசித்து கொண்டிருந்தபோதுதான் அந்த தகவல் கிடைத்தது. அந்த பெரியவர் பாகிஸ்தான் உளவாளியாம். அவர் மூட்டைக்குள் இருந்தவை எல்லாம் அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களாம். எங்கள் ஊரை பற்றி தினமும் சேகரித்த தகவல்களை இரவு சுடுகாட்டுக்குள் சென்று பாகிஸ்தான் அனுப்பி விடுவாராம். எப்படியோ போலீசுக்கு இந்த தகவல் கிடைத்து அவரை கைது செய்து விட்டார்களாம். அவரை பிச்சைக்காரராக அறிந்து இருந்த அனைவரும் அவரை பற்றி உண்மை அறிந்ததும் திடுக்கிட்டார்கள். ஊரே அந்த கிழவரை பற்றி பரபரப்பாக பேச தொடங்கியது.

பேசியவர்கள் இரண்டு  நாட்களில்  பின் அவரை பற்றி மறந்தும் போனார்கள். மூன்றாவது நாள் அந்த கிழவர் மீண்டும் தெருவில் தட்டுபட தொடங்கினார். இப்போது ஊர்க்காரர்கள் அவர் எப்படி  வெளியே வந்தார் என்று யூகித்து பேசிக் கொண்டனர். போலீஸ் அவர் திட்டம் என்ன என்று அறிய அவரை வெளியே விட்டு விட்டார்களாம் . கிழவரும்  தன் மீது போலீசுக்கு சந்தேகம் நீங்கி விட்டது என நினைத்து சதி திட்டம் தீட்டும்போது ரகசியமாக(??) பின் தொடரும் போலீஸ் அவரை கையும் களவுமாக  பிடித்து அவரின் சதி செயலையும் கண்டறிந்து தடுத்து விடுமாம். இந்திய போலீசின் திறமையை எண்ணி ஊரே மெய் சிலிர்த்து கொண்டது.

சில நாட்களில் அந்த கிழவரை மீண்டும் காணவில்லை. இப்போது அவரை பற்றி அதிகம் யாரும் பேசவில்லை. பேசி அலுத்து விட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்த கிழவரை பக்கத்துக்கு ஊரில் பார்த்ததாக சிலர் கூறினார்கள். அதற்கு மேல் அவரை எல்லாரும் மறந்து விட்டார்கள். இன்று வரை அவர் உண்மையிலேயே  பாகிஸ்தான் உளவாளியா? போலீஸ் அவரை கைது செய்ததா? அவர் மூட்டையில் என்ன இருந்தது என யாருக்கும் தெரியாது. அதை விட பாகிஸ்தான் உளவாளிக்கு மதுரை பக்கத்தில் உள்ள ஒரு சிறிய டவுனில் உளவு பார்க்க என்ன இருக்கிறது என்பதும் யாருக்கும் புரியாத ரகசியம்.

அவரை உளவாளி என கிளப்பிவிட்டது யார்? அந்த கதையை விறுவிறுப்பாக அமைத்து கொடுத்தது யார் என தெரியவில்லை. எது எப்படியோ, அந்த கிழவர் எங்கள் மக்களுக்கு பரபரப்பாக பேச ஒரு விஷயத்தை கொடுத்து ஒரு ஸ்பை த்ரில்லர் படத்தில் எங்களையும் கதாபாத்திரமாக்கி விட்டார். நாங்களும் ஒரு உளவாளியை நேரில் பார்த்த சந்தோசத்தை இழக்க விரும்பாமல் அவரை எங்கள் மனதில் உளவாளியாகவே நிறுத்தி கொண்டோம்.
  

1 comment:

  1. இப்படிப்பட்ட உளவாளிகள் எல்லா ஊரிலும் உண்டே ! இவர்களைப் பற்றி துப்பு
    துலக்கிவிடும் கில்லாடிகளும் உண்டு !
    த ம 1

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...