Monday, July 14, 2014

கொஞ்சம் மறந்துடுங்க!!!

பொதுவாக நான் தண்டவாளத்தை அப்படி கடப்பவனில்லை. ஆனால் அந்த நள்ளிரவில்  லெவல் கிராசிங் வரை சென்று திரும்ப சோம்பேறித்தனம்.  இந்த வழியில் சென்றால் சில நிமிடங்களில் வீட்டை அடைந்து விடலாம் .அந்த சோம்பல் ஒரு மறக்க முடியாத இரவை தரப்போகிறது என்று நான் உணரவில்லை.

இருட்டில் கவனமாக அடி எடுத்து வைத்து தண்டவாளத்தில் நடக்க தொடங்கினேன். எதையாவது மிதித்து தொலைத்து விடக் கூடாது. அப்போதுதான் தண்டவாளத்தில் அந்த மூட்டையை  அதை பார்த்தேன். மூட்டை போல இலை அது. லேசாக அசைவது போல தெரிந்தது. யார் அது? அடப்பாவமே. யாரோ தற்கொலை செய்ய முயல்கிறார்கள். விரைவாக அவரை நோக்கி ஓடி அவரை தூக்கி விட்டேன்.

“எழுந்திருங்கள்.”

அவர் அதிகம் சிரமப்படுத்தவில்லை. கையை பிடித்து இழுத்ததும் அவரே எழுந்து விட்டார்.  இருட்டில் முகம் தெரியவில்லை. அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கக் கூடும். தயங்கி நின்ற அவரிடம் பேசத் தொடங்கினேன்

“என்ன பிரச்சினை உங்களுக்கு. வாழ வழியா இல்லை?”

“நான் படும் கஷ்டத்தை நீங்கள்பட்டால் தெரியும் உங்களுக்கு”

“யாருக்குதான் கஷ்டம் இல்லை. என்னையே எடுத்து கொள்ளுங்கள். கை நிறைய சம்பளம். ஆனால் ஊரெல்லாம் கடன். வீட்டுக்கு, காருக்கு என்று கட்டி தீர்த்த பிறகு கையில் வரும் பணத்தை வைத்து குடும்பம் நடத்துவது எத்தனை கஷ்டமாக உள்ளது தெரியுமா? ஆமாம் உங்களுக்கு என்ன பிரச்சினை? இந்த வயதில் காதல் தோல்வி காரணமாக இருக்காது. ஒருவேளை நீங்களும் கடன் வாங்கி மாட்டி கொண்டீர்களா?”

“பணமெல்லாம் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. வீடெல்லாம் பணம்தான். ஒரு உண்மை சொல்லவா. என் அப்பா அந்த காலத்திலேயே கறுப்பு பணம் சேர்த்து வைத்தவர்”

“வேறு என்ன பிரச்சினை. நீங்கள் விரும்பினால் சொல்லலாம். இல்லையென்றால் ரயில் இன்னும் சிறிது நேரத்தில் வரும்.”


அவர் சிறிது யோசித்தார்.

“நீ கேட்பதால் சொல்கிறேன். எனக்கு மன பாரம் சற்று குறையலாம். என்னுடைய பிரச்சினையே என்னுடைய நியாபக சக்தி”

“என்ன? இது ஒரு பிரச்சினையா? நியாபக மறதியில் திண்டாடுகிறார்கள் ஒவ்வொருவரும். நீங்கள் நியாபக சக்திதான் பிரச்சினை என்கிறீர்கள்”

“இந்த கொடுமையை அனுபவித்தால்தான் உனக்கு புரியும். எனக்கு எதுவுமே மறக்காது. முப்பது வருடம் முன்பு நடந்த விஷயம் போல நேற்று போல நியாபகம் இருக்கும். உன்னுடைய முதல் காதல் உனக்கு நியாபகம் இருக்கிறதா?”

சற்றே யோசித்தேன். இந்த மனிதரை பேசாமல் விட்டு இருக்கலாமோ? வலிய சென்று மாட்டி கொண்டேனே. சரி பேச்சு கொடுப்போம். ஒரு வேளை அவர் மனம் மாறினால் சந்தோசம்தானே.

“அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். என் வகுப்பில்  பெண். பெரிய அழகி. பெயர் ஆயிஷா என்று நியாபகம்”

“நிறுத்து. காதலி பெயர் கூட நினைவில்லை பார் உனக்கு”

“ஆம், நாள் ஆகிவிட்டதே”

“இப்போது என்னுடைய கதையை கேள். நேற்றுதான் நடந்தது போல் உள்ளது. என்னுடைய கீதா என்னை விட்டுவிட்டு வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டு...”

முடிக்காமல் அழ ஆரம்பித்தார்.

“நான் உங்களுடைய முதல் காதலை பற்றி கேட்டேன். நீங்கள் எதையோ..”

“இது என்னுடைய முதல் காதல்தான். நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது அவளை காதலித்தேன்”

“புரிகிறது. சிறு வயதிலேயே காதலிக்க ஆரம்பித்து பின்னர்  பிரிந்தால் கஷ்டம்தான். ஆமாம் உங்கள் காதல் ஏன் பிரிந்தது?”

“சொல்ல தெரியவில்லை எனக்கு. கீதா நான் வளர்ந்து பெரியவன் ஆகும்வரை காத்து இருப்பாள் என்று நினைத்தேன். அவளிடம் காதலை சொல்ல சரியான நேரம் பார்த்திருந்தேன். ஆனால் சற்று தாமதித்து விட்டேன். கீதாவோ அவசரப்பட்டு விட்டாள்.”

“என்ன? இரண்டாம் வகுப்பில் காதலித்த பெண்ணிடம் அவளுக்கு திருமணம் ஆகும்வரை காதல் சொல்ல நேரம் வரவில்லையா?”

“எனக்கு தைரியம் இல்லை. கீதா கையில் இருந்த குச்சி என்னை என் காதலை சொல்ல விடாமல் தடுத்து விட்டது. அந்த குச்சியை கண்டாலே எனக்கு பயம்”

“எனக்கு புரியவில்லை. கீதா உங்கள் உடன் படித்த பெண்தானே?”

“இல்லை இல்லை. அவள்தான் என் இரண்டாம் வகுப்பு ஆசிரியை. இப்போது நினைத்தாலும்......”

எனக்கு எரிச்சலாக  வந்தது. பைத்தியகாரன்.

“எப்போதே நடந்த கதையை நினைத்தா அழுகிறீர்கள்? இப்போது கீதா டீச்சரின் பிள்ளைகளுக்கே திருமணம் ஆகியிருக்குமே?”

“ஆகிவிட்டது. ஆனால் கீதா டீச்சரின் திருமணம் நேற்று நடந்தது போலவே உள்ளது”

எனக்கு இப்போது அவரின் பிரச்சினை புரிந்து விட்டது. அவரை எப்படி திசை திருப்பலாம். பொதுவாக ஏதாவது பேசலாம்.

“சரி அழுகையை நிறுத்துங்கள். உங்களுக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் சொல்லுங்கள்”

“கிரிக்கெட்”

அவர் முகத்தில் பிரகாசம். அவரை சமாளித்து விடலாம் என தோன்றியது. மெதுவாக திசை திருப்பிவிட வேண்டியதுதான்.

“சொல்லுங்கள் 2011ல் இந்தியா உலக கோப்பையை ஜெயித்தது நினைத்து பாருங்கள். அப்போது எத்தனை சந்தோசத்தில் இருந்திருப்பீர்கள்”

“நான் அதை பார்க்கவில்லை. 96 உலகக்கோப்பையில் இந்தியா ஈடன் கார்டனில் மோசமாக தோற்றது நினைவிருக்கிறதா? அதன் பின் என்னால் கிரிக்கெட் பார்க்கவே முடியவில்லை. அன்று நான் எப்படி அழுதேன் தெரியுமா? அன்றே நான் தற்கொலை செய்திருக்க வேண்டும். என்ன ஒரு தோல்வி அது”

மீண்டும் அழுகை. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. காம்ப்ளியும், அசாருதீனுக்குமே அந்த தோல்வி நினைவில் இருக்காது. ஆனால் அவரை பார்க்கவும் பாவமாக இருந்தது. மறதியும் ஒரு வகையில் வரம்தான் போல. இன்னும் பேசினால் ஏதாவது ஒன்றை சொல்லி அழுது கொண்டே இருப்பார். சந்தோசத்தை விட சோகம்தானே மனத்தை அதிகம் பாதிக்கும்.

“ நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டி இருக்கிறீர்களா?”

“நிறைய பேரிடம். பயன் இல்லை. இது நோய் இல்லை என்கிறார்கள்”

“ஒன்று செய்யுங்கள். எனக்கு தூக்கம் வருகிறது. என்னுடைய வீடு பக்கத்து தெருவில் இரண்டாம் வீடு. நாளை காலை வாருங்கள். கூகிளில்  தேடி  என்ன செய்வது என்று பார்க்கலாம்”

சொல்லிவிட்டு நகர முயன்றேன்.

“சரி நிச்சயம் வருகிறேன். எனக்கு ஏதோ உங்களால் நன்மை நடக்கும் என்று தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை . என் மேல் அக்கறை  கொண்ட உங்கள் முகத்தை பார்க்க வேண்டும். வெளிச்சத்துக்கு வாருங்கள்”

சற்று நடந்து வெளிச்சத்திற்கு வந்தோம். என்னுடைய முகத்தை கூர்ந்து பார்த்தார்.

“டேய் நீயா?”

“என்னை உங்களுக்கு தெரியுமா?”

“தெரியுமாவா? மூன்று வருடம் முன் தியேட்டரில் என் காலை மிதித்து விட்டு மன்னிப்பு கூட கேட்காமல் சென்றவன்தானே நீ. எனக்கு எத்தனை வலித்தது தெரியுமா?”

அவரின் முகம் சிவந்தது. அருகில் வேறு யாரும் இல்லை . கொலை ஏதும் செய்து விடுவானோ? என் முகத்தை முறைத்து  பார்க்க தொடங்கினான். எந்த தியேட்டரில்  இவன் காலை மிதித்தேன். யோசித்து...........

“ஆ........”


என்னுடைய காலை ஓங்கி மிதித்து விட்டு  அவர் ஓடி கொண்டிருந்தார்.


3 comments:

 1. கற்பனைக் கதைதான். ஆனாலும், மனதில் பதிந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ...

   Delete
 2. வணக்கம்
  கதையின் கற்பனை வளம் நன்று.. கதை ஆரம்பம் முதல் முடிவுவரை இடைநிறுத்தாமல் அருமையாக நகர்ந்துள்ளது. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...