Sunday, November 23, 2014

அரசியலுக்கு வர ரஜினிக்கு தயக்கம் ஏன்?

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய விவாதங்கள் மீண்டும் சூடு பிடித்து விட்டது. ரஜினியோ அரசியலுக்கு வர தயங்குவதாக கூறி விட்டார் இருந்தபோதும் அவர் அரசியலுக்கு கட்டாயம் வருவார் என்பது  ரசிகர்களின்  நம்பிக்கை. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பது சில  அரசியல்வாதிகளின் விருப்பம். வந்து விடுவாரோ  என சில அரசியல்வாதிகளுக்கு பயம். வந்தால் மட்டும் என்ன மாறிவிடப் போகிறது என்பது சிலரின் கருத்து.  அவர் அரசியலை படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது  அதி மேதாவிகளின் சிந்தனை. ஆனால் என்னை பொறுத்தமட்டில் ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. வரத் தேவையுமில்லை.

ரஜினி ஏன் அரசியல் பிரவேசம் செய்யக்கூடாது என்பதற்கு முதல் காரணம் அவர் உடல் நிலை. ஊர்ஊராக சென்று பிரசாரம் செய்ய அவரின் உடல்நிலை அனுமதிக்குமா என்பது சந்தேகமே.இதை ரஜினி நன்றாகவே அறிந்து வைத்து இருப்பார்.


அடுத்து கணக்கில் எடுத்து கொள்ள வேண்டிய விஷயம் ரஜினியின் இயல்பான குணம். ஆரம்ப காலங்களில் பத்திரிக்கையாளர்களிடம் சண்டையிடுவார். கோபம் வந்தால் அடித்து நொறுக்கி விடுவார் என்று நிறைய படித்து உள்ளேன். ஆனால் சமீப காலங்களில் தன்னால் யாருடைய மனமும் புண்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளார். யாரையும் பகைத்து கொள்ளவும் விரும்புவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் கண்டுகொள்வதும் இல்லை. அரசியலுக்கு வருவதென்றால் இந்த மனநிலையை அப்படியே மாற்றி கொள்ள வேண்டும். நல்லது செய்தாலும் எதிர் கட்சியினரை  விமர்சிக்க வேண்டும். நிறைய அரசியல் எதிரிகளை இயல்பாகவே சம்பாதிக்க வேண்டியது இருக்கும். கூடவே நிறைய மன உளைச்சலையும்.

அடுத்த விஷயம்  அவர் அரசியல் பிரவேசம் செய்ய வேண்டியது என்றால் திமுகவிலோ, அதிமுகவிலோ இணைந்து விட முடியாது அந்த இரண்டு கட்சி தலைமைகளும் அவர்  வெளியே இருந்து ஆதரவு அளிப்பதைத்தான் விரும்புமே தவிர அவர் தங்கள் கட்சிக்குள் வருவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அவர்களை தவிர்த்து  தமிழக காங்கிரசில் அவர் இணைந்தால் வரும் விளைவுகளை  கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. பாஜகவில் அவர் இணைய நினைத்தாலும் பாஜகவின் மத அடையாளம் ரஜினிக்கு மனத்தடையை ஏற்படுத்தும். இருக்கும் ஒரே வாய்ப்பு தனிக்கட்சி ஆரம்பிப்பதுதான். ஒரு வேளை அதை அவர் செய்து ஆட்சியை பிடிப்பதாகவே வைத்து கொண்டாலும் அமைச்சரவை அமைக்கும்போது  ரசிகர் மன்றங்களின் நிர்பந்தங்களுக்கு உட்பட்டே எதையும் செய்ய வேண்டியது இருக்கும். மற்ற கட்சியிலிருந்து சில தலைவர்களும், சில நடிகர்களும்  ரஜினியின் கட்சியில்  வந்து இணைவதாக  கொண்டாலும் மன்றங்களின் கையே இயல்பாக எதிலும் ஓங்கி இருக்கும். அது நல்லது என்று எளிதாக எடுத்து கொண்டுவிட முடியாது.

ரஜினி இது அனைத்தையும் மீறி அரசியலுக்கு வந்து முதல்வராகவே ஆனாலும் அவரால் தனியாக எந்த ஒரு மாயாஜாலத்தையும் நிகழ்த்தி விட முடியாது. அவர்  நல்லது செய்ய நினைத்தாலும் அரசியலில் அது அவ்வளவு எளிதில்லை. எது செய்தாலும் விமர்சிப்பார்கள். தடை போடுவார்கள். இதை ரஜினி நன்றாக உணர்ந்து வைத்து இருப்பதையே அவரின் ‘லிங்கா’ இசை வெளியீடு பேச்சு எதிரொலிக்கிறது.


இவை அனைத்தையும் மீறி ரஜினி அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கே நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமே இருக்கும் . ஏனென்றால் அவர் பார்க்காத பணமும் இல்லை. இல்லாத புகழும் இல்லை. ஆட்சி அதிகாரத்தை விரும்புவரும் அவர் இல்லை. எனவே அவர் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கவேண்டியது நம் கடமை.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...