‘ரட்சகன்’ என்றொரு படம்
வந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். அந்த படத்தின் இயக்குனர் பெயர்
பிரவீன்காந்த் என்று நினைவு. அந்த படம் கிட்டத்தட்ட அந்த ஷங்கர் படங்களை அடியொற்றி
பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும். இருந்தபோதும் வலுவான கதை இல்லாததால் படம் பெரிய
வெற்றியை ஈட்ட முடியவில்லை. படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கு மிகப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியது. சில வருடங்களுக்கு முன் அதே போல் பிரமாண்டமாக பணத்தை கொட்டி
சுசி.கணேசன் ‘கந்தசாமி’ என்றொரு படம் எடுத்தார். பொறுமையை சோதிக்கும் திரைக்கதை. பெரிய
அளவில் மார்கெட்டிங் செய்தும் படம் தேறவில்லை. படத்தின் இயக்குனர் அதன் பின் படம்
எடுத்தது போல தெரியவல்லை.
பிரமாண்டம் மட்டுமே ஷங்கரின் வெற்றி சூத்திரம் என்பதாக வைத்து
கொண்டால் மேலே கூறிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டும். ஆனால்
பிரமாண்டம் என்பது மட்டுமே ஷங்கரின் வெற்றிக்கு காரணம் இல்லை. அழுத்தமான கதை,
விறுவிறுப்பான திரைக்கதையே அவரின் படங்களின் வெற்றிக்கு காரணம். பிரமாண்டம்
ஷங்கரின் அடையாளம் மட்டுமே. ஆனால் அதை அவர் வெற்றிக்கு காரணமாக புரிந்து கொண்டதால்
‘கந்தசாமி’யும், ‘ரட்சகன்’ னும் பெரிய அளவு பணத்தை விழுங்கி முதலுக்கு மோசம்
விளைவித்தன.
‘ஐ’யை பொருத்தமட்டில் இந்த
முறை ஷங்கரே தன்னுடைய வெற்றியை தவறாக புரிந்து
கொண்டாரோ என்று சந்தேகம் எழுகிறது. கலர் கலராக காட்சிகளும், பிரமிக்க வைக்கும்
விசுவல் எபக்ட்சம் இருந்தால் போதும் படம் ஓடி விடும் என்று நினைத்து விட்டாரோ
என்னவோ. மிக சாதாரண கதையை எடுத்து கொண்டு படம் காட்டியுள்ளார். படத்தின் நீளம்
வேறு பொறுமையை சோதிக்கிறது. படத்தின் கதை அப்படி ஒன்றும் மறைத்து வைக்க வேண்டிய
கதை இல்லை. தன் உருவத்தை சிதைப்பவர்களின் உருவத்தை கதாநாயகன் சிதைத்து அவர்களை பழி
வாங்குகிறார். கதை அவ்வளவுதான்.
விக்ரம் உழைப்பை கொட்டியுள்ளார். உடலை ஏற்றி, இறக்கி, உருமாற்றி அர்ப்பணிப்பு
உணர்வு என்றால் என்ன என்று காட்டுகிறார். வேறு எந்த நடிகராலும் அந்த கதாபாத்திரத்தை
செய்து விட முடியாது. உண்மையில் படம் பார்த்து கொண்டிருப்பவர்களுக்கே ஒரு பயம்
வருகிறது. இப்படி எல்லாம் உடலை வருத்தி எதாவது ஆகி விடப் போகிறது என்று.
வருடத்துக்கு மூன்று படம் நடித்து பணம் பார்ப்பதை விட்டுவிட்டு மூன்று
ஆண்டுகளுக்கு ஒரு படம் என்று நடித்து கஷ்டப்பட்டு தன்னை வித்தியாசப்படுத்தி காட்டி
கொள்ளும் விக்ரம் ஒரு ஆச்சரியம்.
எமி தமிழ் பெண் போலவே தெரிகிறார். வெள்ளைத்தோல் துருத்தி கொண்டு
தெரியாமல் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் குறை இல்லை. சந்தானத்திற்கு சிரிக்க
வைக்க அதிக வாய்ப்புகள் இல்லை. கிடைத்த வாய்ப்புகளில் தன்னுடைய காமெடி செய்கிறார். ஆனாலும் பெரும்பாலான
இடங்களில் முகம் சுளிக்க வைக்கும் வகையிலேயே காமெடி இருக்கிறது. இவர்களை தவிர
வரும் ஐந்து வழக்கமான வில்லன்கள். நன்றாகவே வில்லத்தனம் செய்திருக்கிறார்கள்
அது எப்படி ஷங்கர் படங்களில் மட்டும் காட்சிகள் இத்தனை அழகாக இருக்கிறது என்று தெரியவில்லை. சென்னை
நகரின் அழுக்கு தெருக்களையும் அழகாக காட்டியுள்ளனர். சண்டை காட்சிகள் வித்தியாசம்.
ஆனால் மிக நீளம். பாடல் காட்சிகளில் வழக்கம் போல ஷங்கர் முத்திரை. ஆனால் பாடல்கள் இன்னும்
நன்றாக இருந்திருக்கலாம். சில நேரங்களில் சலிப்பை வர வைக்கின்றன. படத்திலேயே சில
விளம்பரங்களையும் எடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தியது ஒரு புதுமை
ஷங்கர் ‘நண்பன்’ படத்தை ரீமேக் செய்ய கதை இல்லாததுதான் காரணமோ என்று இந்த
படத்தை பார்த்தும் தோன்றியது. ட்விஸ்ட் என்று அமைத்த காட்சிகளும் எடுபடவில்லை. எல்லா ட்விஸ்ட்களும்
எதிர்பார்த்ததுதான். வழக்கமாக ஷங்கர் படம் ஏற்படுத்தும் எந்த பாதிப்பையும் இந்த
படம் ஏற்படுத்தவில்லை. பளபள காட்சிகளுக்காகவும், விக்ரமுக்காகவும் ஒரு முறை
பார்க்கலாம். இரண்டாம் முறை பார்ப்பது கடினம். பொறுமை இழந்து விடுவோம்.
‘நாயக்’ ‘பாய்ஸ்’ என்று இரண்டு படங்கள் தோல்வி அடைந்த பின் ‘அந்நியன்’
எடுத்தார் ஷங்கர். படம் வெளிவந்த பின் ஒரு பேட்டியில் ‘அந்நியன்’ படத்துக்குத்தான்
ஸ்க்ரிப்டுக்காக அதிகம் உழைத்தோம் என்று கூறி இருந்தார். அந்த படம் பார்க்கும்போது
அது உண்மை என்றும் தோன்றியது. இப்போது சுஜாதாவும் இல்லாததால், அதை விட அதிக
உழைப்பை அடுத்த படத்துக்கு ஷங்கர் கொட்டியே ஆக வேண்டும்.
இது விமர்சனம் இல்லை. இதை எழுதியவர் சினிமா மேதையும் இல்லை. படத்தை
பார்க்கும்போது தோன்றிய எண்ணங்களின் தொகுப்பே இந்த கட்டுரை.
No comments:
Post a Comment