Wednesday, January 21, 2015

இன்டர்ஸ்டெல்லர்- inspired by தமிழ் சினிமா????

கொஞ்ச நாளா நம்ம ஊருல ஒரு பழக்கம் வேகமா பரவிட்டு வருதுக. அதுதாங்க ஒரு தமிழ் படம் வந்ததுன்னா அந்த படத்தை பார்த்து அது எந்த எந்த இங்கிலீஷ் படத்துல இருந்து உருவியிருக்காங்கன்னு ஆராய்ச்சி செஞ்சு நெட்ல போடறது. அப்புறம் வெள்ளைக்காரன்லாம் என்னமா படம் எடுக்குறான். நம்ம ஆளுங்க காப்பி அடிக்கத்தான் லாயக்குன்னு கமெண்ட் போடுறது.

ஆனா பாருங்க, வெள்ளைக்காரன் யோசிக்க முன்னாடியே நம்ம ஆளுங்க விதவிதமா யோசிச்சு படம் எடுத்துகிட்டுதான் இருக்காங்க. என்ன நம்ம ஆளுங்களுக்கு எல்லாமே புரிஞ்சுடும்னு நெனச்சு ரொம்ப விசயத்தை மேலோட்டமா சொல்லிட்டு விட்டுடுறாங்க.

இப்பிடிதாங்க யாரோ கிறிஸ்டோபர் நோலனாம். பெரிய டைரக்டராம். ‘இன்டெர்ஸ்டெல்லர்’ அப்பிடின்னு படம் எடுத்திருக்காராம்; அவர் படம் எடுத்தா யாருக்கும் புரியாதாமாம்; இப்படி எல்லாம் சிலர் பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்பிடி என்னப்பா புரியாத மாதிரி படம்; கண்டிப்பா அதை பார்த்தே ஆகணுமேன்னு முடிவு செஞ்சு படத்துக்கும் போய்ட்டேன். படம் ஓடிகிட்டே இருந்தது. எப்படியாச்சும் புரிஞ்சுக்கணும் அப்பிடின்னு ஆர்வமா வச்ச கண்ணு வாங்காம திரையை பார்த்துக்கிட்டே இருந்தேன்.

என் பக்கத்துல உக்காந்து இருந்தவர் படத்தோட ஆரம்பத்துல இருந்தே   சீட்ல உக்கார முடியாம நெளிஞ்சுகிட்டே இருந்தாரு. திடீர்னு என்ன நெனச்சாரோ என்கிட்ட வந்து “ஏன் சார்? ஏதோ வார்ம் ஹோல் அப்பிடின்னு சொல்றானே அப்பிடின்னா என்ன?” அப்பிடின்னார்.

ஆஹா! நம்ம புத்திசாலித்தனத்தை காமிக்க சிக்குனாண்டா ஒருத்தன்னு நெனச்சுக்கிட்டு ஐன்ஸ்டீன் அவதாரம் எடுத்தேன். “அதாவது சார், நாம இப்போ சென்னைல இருக்கோம். நாம இப்போ மதுரை போகணும்னா ஐநூறு கிலோமீட்டர் போகணும். அப்பிடி ஐநூறு கிலோமீட்டர் போகணும்னா நாம பஸ்ல போறோமா? ட்ரைன்ல போறோமா? இல்ல பிளைட்டா? அப்பிடிங்குறதை பொறுத்து ரெண்டு மணி நேரத்துல இருந்து, பனிரெண்டு மணி நேரம் வரை ஆகலாம். அப்பிடின்னா என்ன அர்த்தம்னா மதுரைக்கும் சென்னைக்கும் நடுவுல தூரம் மட்டும் இல்ல. நேரமும் இருக்கு. இது வரைக்கும் சொன்னது புரிஞ்சதா?” அப்படின்னேன். உண்மைல நான் சொன்னது எனக்கே புரியல. அந்த ஆளுக்கும் புரியாதுன்னு நம்பிக்கை. ஆனா அந்த ஆளு வயித்து கடுப்பு வந்த மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு தலையை ஆட்டுனார்.

“ரைட்! இப்போ இந்த வார்ம் ஹோல் என்ன செய்யும்னா நம்ம பிரபஞ்சத்துல இருக்குற ரெண்டு இடத்துக்கு நடுவுல ஒரு ஷார்ட் கட் கிரியேட் செய்யும். நீங்க அந்த ஷார்ட் கட்டை பிடிச்சுட்டா தூரத்தை பத்தி கவலைப்பட தேவை இல்லை. பிரபஞ்சத்தோட ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு நேர விரயம் ஏதும் இல்லாம போயிடலாம். இதுதான் வார்ம் ஹோல்” அப்பிடின்னேன்.

அவர் தலையை ஆட்டிகிட்டே தியேட்டரோட விட்டத்தை பார்த்தார். ச்சே! மனுசன்  என்னமா யோசிக்கிறார் அப்பிடின்னு நெனச்சுகிட்டேன். திடீர்னு சத்தமா சிரிச்சார். கொஞ்ச நேரம் கழிச்சு “இந்த இரண்டாம் உலகம் படத்துல ஆர்யா ஒரு மலைல ஏறி இன்னொரு கிரகத்துக்கு போய் அனுஷ்காவை பார்ப்பாரே. அதுவும் வார்ம் ஹோல்தான?” அப்பிடின்னார்.

அப்போதான் நானும் யோசிச்சேன். நோலன் ‘இரண்டாம் உலகம்’ பார்த்துதான்  ‘இண்டரஸ்டெல்லர்’ எடுத்துட்டாரோன்னு. செல்வராகவனுக்கு இந்த விசயம் தெரியுமான்னு தெரியலையே அப்பிடின்னு நான் அதிர்ச்சில உறைஞ்சு போனப்பதான்  பின் சீட்ல இருந்து இன்னொருத்தர் என்ட்ரி ஆனார்.

“என்ன சார் இரண்டாம் உலகம்? ‘பாபா’ படம் பார்த்தீங்களே? தலைவர் கொத்தவால் சாவடில இருந்து இமயமலைக்கு ஷார்ட் கட் எடுப்பார் பாருங்க. பத்து வருஷம் முன்னாடியே தமிழ் சினிமால இதெல்லாம் வந்தாச்சு சார். ஹாலிவுட்காரனுக்கு இதெல்லாம் இப்போதான் புரிஞ்சிருக்கு” அப்பிடின்னார்.


அவங்க பேசுனதும் எனக்கு கிரிஸ்டோபர்  நோலன் மேலேயே சந்தேகம் வந்துடுச்சு. ஒரு வேளை அவர் தமிழ் சினிமா பார்த்துதான் ‘இன்டர்ஸ்டெல்லர்’ எடுத்தாரா? நீங்களும் யோசிச்சு பார்த்து சொல்லுங்களேன். 

3 comments:

  1. Watch Zero kilometer Tamil short film

    ReplyDelete
  2. thr r lot of time travel movies available in hollywood . இந்த இன்டர்ஸ்டெல்லர்ல black hole ப்படிங்ற தியரி மட்டும் தான் யூஸ் பன்னிருப்பாங்க . மத்தபடி முழுக்கமுழுக்க இது ஒரு அப்பா - மகள் சென்டிமென்ட் படம் .

    நோலனோட the prestige , memento , Following , Inception படங்கள்லாம் பாருங்க ஜீ . ஒரு டைம் பார்த்தா புரியுற ஆதிரி இருக்கும் . ஆனா , எத்தன டைம் பார்த்தாலும் புதுசு புதுசா ஒரு விஷயம் தெரியும் . அவரோட பேட்மேன் ட்ரையாலஜி கூட இந்த டைப் படம்தான் .

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...