Saturday, February 14, 2015

ஸ்மிருதியின் காதல் கதை(கள்) !

ஸ்மிருதி. தமிழ் பெண்ணுக்கு இது புதுமையான பெயர்தான். பெயர் மட்டும் அல்ல அவளும் எனக்கு ஒரு புதிராகவே தெரிந்தாள்.அவள் இந்த அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. இது வரை என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. பெண்கள் தேடி வந்து பேச நீ பேரழகனா? என்று கேட்க வேண்டாம். சொந்த நாட்டை விட்டு நீங்கள் ஸ்வீடன் வந்து இருந்தீர்கள் என்றால், வந்து  இடத்தில் ஒரு தமிழனை பார்த்ததும்  இயல்பாக உங்களுக்கு  ஒரு நட்புணர்வு வருமே. அப்படி எதுவும் அந்த  பெண்ணிற்கு வந்தது போலவே தெரியவில்லை. என்னுடன் மட்டும் இல்லை. மற்ற வெள்ளைக்காரர்களுடனும் அந்த பெண் அதிகம் பேசுவதில்லை. தொழில் நிமித்தம் பேசுவதோடு சரி.

அந்த பெண்ணின் மேல் எனக்கு ஏன் இத்தனை ஆர்வம் என்று கேட்காதீர்கள். தமிழ் பேச ஒரு துணை கிடைத்தது என்ற ரீதியிலேயே அந்த பெண் மேலான என்னுடைய அக்கறை தொடங்கியது .எங்கேயோ மதுரையில் பிறந்து மென்பொருள் படித்து பின்னர் விருப்பமே இல்லாமல் கரன்சி நோட்டுகளுக்காக  ஸ்வீடன் கிளம்பினேன். கிளம்பினேன்  என்பதை விட என் கம்பெனி வலுக்கட்டாயமாக என்னை அனுப்பி வைத்தார்கள் என்பதே உண்மை. இந்த ஊர்காரர்களிடம் பேசி மென்பொருள் எழுதி தருகிறோம் என்று மூளைசலவை செய்து  காசு பிடுங்க நான்தான் அவர்களின் முதல் தேர்வு. இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்து திக்கி திணறி ஒரு பின்னர் சமாளித்து விட்டேன். தமிழ் பேச ஆள் இல்லாமல் உப்பு சப்பில்லாமல் சாப்பிட்டு அலுத்து இருந்த நேரத்தில் இன்னொரு பெண்ணும் சென்னையில் இருந்து இங்கே வருகிறாள் என்றதும் எனக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி.

ஸ்மிருதியை முதல் நாள் அலுவலகத்தில் பார்த்ததும் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பானது. பெரிய அழகி என்று சொல்ல முடியாது. இருந்தாலும் களையான முகம். அழகான பெரிய கண்கள். கண்களை வைத்தே பெரிய நடிகை ஆகி விடலாம். அப்படி எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்கும் கண்கள். இருந்தாலும் அந்த  கண்களில் சோகம் மட்டுமே இருந்ததாக உணர்ந்தேன். புதிய இடம் தந்த பயமாக இருக்கலாம். ஆனாலும் அவள் நடவடிக்கைகளில் எந்த பயமும் இல்லை. சோகம் மட்டுமே அப்பட்டமாக தெரிந்தது. எப்படியும் இந்த அலுவலகத்தில் தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சென்னையிலேயே விசாரித்திருப்பாள். எப்படியும் என்னை தேடி வருவாள் என்று எதிர்பார்த்து அவளையே கவனித்து கொண்டிருந்தேன். இறுதியில் ஏமாந்தேன்.

இரண்டாம் நாள் நானே முதல் அடி எடுக்க தீர்மானித்தேன். மதிய நேரத்தில் அவளின் இடத்தை  நோக்கி சென்று “ஹலோ!” என்றேன். அவளும் செயற்கையான புன்சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்து கொண்டே “ஹலோ” என்றாள்.

“நானும் சென்னைதான். ஸ்வீடன் வந்து இரண்டு வருசமாச்சு”. பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்தாள். அந்த செயற்கையான சிரிப்பு முகத்தில் அறைவது போல இருந்தது. “செட்டில் ஆகுற வரைக்கும் ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க” என்றேன். “தேங்க்ஸ்” என்று ஒரே வார்த்தையில் பதில் வந்தது. எனக்கு சற்று எரிச்சல் வந்தது. தரையில் எதையோ தேடுவது போல பாவனை செய்தேன். “என்ன ஆச்சு?” என்றாள். “இல்ல நீங்க பேசும்போது முத்து எதாவது உதிர்ந்திருக்கான்னு பார்த்தேன்” என்றேன். சிரிப்பாள் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றினாள். தோல்வியுடன் வீட்டுக்கு திரும்பினேன்.

நாட்கள் உருண்டு ஓடின. அந்த பெண்ணுடன் திரும்ப பேச முயலவில்லை. அந்த பெண் என்னுடன் மட்டும் இல்லை, அனைவரிடமும் அப்படிதான் இருக்கிறாள் என்பதில் ஏதோ ஒரு குரூர சந்தோசம். இருந்தாலும் எதற்காக எப்பொழுதும் சோகமாக இருக்கிறாள் என்ற கேள்வி மனதை குடைந்து கொண்டே இருந்தது. வெளியே பனி கொட்டும் நேரங்களில் அவளின் சோக முகத்தை பார்ப்பது மனச்சோர்வு அளிப்பதாக இருந்தது. ஒரு நாள் சென்னை அலுவலகத்து நண்பர்களை  தொலைபேசியில் அழைத்து அந்த பெண்ணை பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். வேலை சுமையில் அதையும் செய்ய முடியவில்லை.

இப்படி ஸ்மிருதியை ஆராய்ந்து கொண்டிருந்தபோது இரண்டு நாட்கள் அவள் காணாமல் போனாள். அலுவலகம் திரும்பியபோது மணிக்கட்டுக்கு சற்று மேல் பெரிய கட்டு. அதே அழுது வடிந்த முகம். பாவம், எப்படியோ காயம் பட்டுவிட்டது போலும். தனியாக வேறு இருக்கிறாள். பொதுவாக விசாரித்துவிட்டு வரலாம் என்று தேடி போனேன்.

“என்னங்க கைல கட்டு” என்றேன்.

“காய் நறுக்கும்போது வெட்டிகிட்டேன்”

“பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க. காய் வெட்டும்போது விரலை வெட்டலாம். மணிக்கட்டுக்கு மேல எப்படி வெட்டிக்குவீங்க” இந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு எனக்கு அவளிடத்தில் உரிமை இல்லை. ஒரே நாட்டில்  இருந்து வந்து இங்கே வேலை செய்கிறோம் என்பதை தவிர அவளுக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இருந்தபோதும் அவள் என்னிடம் பொய் சொல்ல முயல்கிறாள் என்பதே எனக்கு அந்த கேள்வியை கேட்க போதுமானதாக இருந்தது. எப்படியும் கத்தி அவமானப்படுத்த போகிறாள். குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் கத்தி தொலையட்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். இல்லையென்றால் வெள்ளைக்காரன் எதையாவது புரிந்து கொண்டு வேலைக்கே ஆப்படித்து விடுவான்.

“தற்கொலை செஞ்சுக்கலாம்னு பார்த்தேன். ஆனா சரியா வெட்டிக்கலை போல. கொஞ்சமா ரத்தம் வந்து நின்னு போச்சு. அப்புறம் வலி பொறுக்காம ஹாஸ்பிடல் போய்டேன்” என்றாள். சற்றும் அலட்டிக் கொள்ளாமல்.

“என்னங்க சொல்றீங்க. தற்கொலை முயற்சி செஞ்சேன்னு சாதாரணமா சொல்றீங்க?”

“வேற எப்படி சொல்றது?”

எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. வந்த இடத்தில வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் தெரியாமல் இவளிடம் மாட்டி கொண்டேனோ? இந்த மாதிரி நேரத்தில் என்ன சொல்லுவது என்று கூட தெரியவில்லையே. ஆங். இப்படி சொல்லலாம். “வாழ்க்கைல ஆயிரம் பிரச்சினை இருக்கும்ங்க. அதுக்காக தற்கொலை ஒரு தீர்வே இல்லை”

“பின்ன வேற எதுதான் தீர்வு?”

“உங்களுக்கு ஒரு இருவத்தஞ்சு வயசு இருக்குமா. இன்னும் எவ்வளவோ இருக்கும் வாழ்க்கைல. இப்படி கடவுள் தந்த வாழ்க்கைய கோழைத்த...”

“கொஞ்சம் நிறுத்துறீங்களா ப்ளீஸ். எப்பவாச்சும் தற்கொலை செய்ய முயற்சி செஞ்சிருக்கீங்களா? அப்போ தெரியும் அதுக்கு எத்தனை தைரியம் வேணும்னு. ரொம்ப நாளா பயந்து பயந்து ரெண்டு நாள் முன்னாடிதான் எனக்கே தைரியம் வந்துச்சு”

“சரிங்க. அதுக்காக நீங்க செய்யுறது சொல்யூசன் இல்ல” என்றேன்.

“ஒரு உதவி செய்ங்க கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரலாமா. யாரு கூடவாச்சும்  பேசணும் போல இருக்கு ப்ளீஸ்” என்றாள். மூளை வேண்டாம், மாட்டி கொள்ளாதே என்றது. இறுதியில் இதயமே ஜெயித்தது.

ருகில் இருந்த ஒரு பூங்காவுக்கு என்னை அழைத்து சென்றாள். எதுவுமே பேசவில்லை. “என்னங்க. ஏதோ பேசணும்னு சொன்னீங்க?” என்றேன்.

“நான் ஸ்வீடன் வந்தது பெரிய தப்புங்க. என்னோட பாய் பிரெண்ட் என் கூட சண்டை போட்டான். நான் போக கூடாதுன்னு. நான்தான் கேக்கல. எப்படியும் சமாதானம் ஆகிடுவான்னு நெனச்சேன். ஆனா இந்த மூணு மாசத்துல ஒரு நாள் கூட என் கூட பேசல.”

“அடச்சே. இதுக்கு போய் தற்கொலையா? என்னங்க நீங்க. ஒயர் காதல் கான்செப்ட் எல்லாம் பூவே உனக்காக காலத்திலேயே எக்ஸ்பைரி  ஆகிடிச்சு. இப்போ போய் லவ் பெயிலியர் பத்தி எல்லாம் பேசிக்கிட்டு”

“இல்லங்க அவன் எப்படி என்னை லவ் செஞ்சான்னு தெரியாது. ஆனா நான் அவனை ரொம்ப லவ் பண்ணேன். நாங்க ரெண்டு பெரும் ஒரே நேரத்தில நம்ம கம்பெனில வேலைக்கு சேர்ந்தோம். ஒரே டீம். முதல் நாளே எவ்ளோ அழகா ப்ரோபோஸ் செஞ்சான் தெரியுமா?”

“சொல்லுங்க”

“உங்க பேரு என்னங்கன்னு கேட்டான்?”. “ஸ்மிருதி” அப்படின்னேன். “உங்க அப்பா புத்திசாலி போல. என்ன அழகா பேரு வச்சு இருக்காரு” அப்படின்னான். “அப்போ நீங்களும் உங்க பொண்ணுக்கு அதே பேரை வச்சுடுங்க”ன்னு சொன்னதும் “அது முடியாதுங்க. எப்படி அம்மாவுக்கும், பொண்ணுக்கும் ஒரே பேரை வைக்க முடியும்” அப்படின்னு கேட்டான்.

“புரியலையே”

“எனக்கும் அப்போ புரியல. கொஞ்சம் யோசிச்சு பாருங்க புரியும்”

 தொடரும்


3 comments:

  1. வணக்கம்
    கதை அருமையாக உள்ளது சொல்லிச் சென்ற விதம் சிறப்பாக உள்ளது இறுதியில் எதிர்பார்ப்புடன் சொல்லியுள்ளீர்கள் தொடருங்கள் அடுத்த பகுதியை த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...