சில நாட்களாகவே என் மனதில் உள்ள ஒரு கேள்வி பெண்களுக்கு சூர்யாவை ஏன்
பிடிக்கிறது என்பதுதான். எந்த பெண்ணிடம் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் தயங்காமல்
சூர்யா என்று சொல்கின்றனர். சூர்யாவின் நடிப்பை பற்றியோ அழகை பற்றியோ எந்த
சந்தேகமும் இல்லை. இருந்த போதும் எப்படி எல்லா பெண்களையும் கவர்ந்தார் மனிதர்
என்பதுதான் ஆச்சரியம். அரிதாக மற்ற நடிகர்களின் பெயர்களை சிலர் கூறினாலும் “சூர்யாவையும்
பிடிக்கும்” என்று இழுத்து கொண்டேதான் முடிக்கின்றனர். பத்து வயது முதல் முப்பது
வயது வரை பெரும்பாலான பெண்கள் சூர்யா ரசிகைகளாகவே உள்ளனர்.
ஒரு வேளை சிக்ஸ்பேக்ஸ்தான் காரணமோ என்ற சந்தேகத்தில் ஒரு பெண்ணிடம்
கேட்டேன். சூர்யாவை எந்த படத்திலிருந்து பிடிக்க ஆரம்பித்தது என்று. நான்
எதிர்பார்த்த பதில் “அயன்” அல்லது “வாரணம் ஆயிரம்”. ஏனென்றால் ஆனால் அந்த பெண்
சொன்ன பதில் “பூவெல்லாம் கேட்டு பார்”. அந்த படம் வெளிவந்தபொழுது அந்த பெண்ணுக்கு
பத்து வயதுதான் இருந்திருக்கும். அந்த படம் சூர்யாவுக்கே எவ்வளவு பிடிக்கும்
என்பது சந்தேகம்தான். ஆனால் பாருங்கள், அந்த பெண்ணுக்கு அந்த படம் பிடித்து இருக்கிறது.
இந்த ரகசியத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்து ஒரு
பெண்ணிடம் கேட்டே விட்டேன் “அப்படி சூர்யாவிடம் என்ன ஸ்பெசலாக இருக்கிறது என்று உங்களுக்கு
எதற்கு சூர்யாவை பிடிக்கிறது” என்று.
“எதற்காக கேட்கிறீர்கள்” என்றார் அந்த பெண்.
“இதை தெரிந்து கொண்டால் பெண்களை புரிந்து கொள்ளலாம் என்றுதான் ” என்றேன்.
அந்த பெண் சிறிது நேரம் யோசித்தார். “ஆண்களுக்கு எந்த நடிகர்களை
பிடிக்கிறது?” என்று கேட்டார்
“பெரும்பாலும் விஜய், அஜித் என்று சொல்வார்கள்” என்றேன்.
“சரி. ஏன் விஜயை பிடிப்பவர்களுக்கு அஜித்தை பிடிக்கவில்லை. அஜித்
பிடிப்பவர்களுக்கு விஜயை பிடிப்பதில்லை” என்று கேட்டார்.
“காரணம் சொல்வது கடினம். ஒரு வேளை விஜயை பிடிக்காமல் போனதால் அஜித்தை
பிடித்து இருக்கலாம். அல்லது அஜித்தை
பிடிக்காமல் போனதால் விஜயை பிடித்து இருக்கலாம்” என்றேன்.
“அதுதான் ஏன்? இருவரின் கதை தேர்வு செய்யும் விதத்திலும் ஒரு
வித்தியாசமும் இல்லை. நடிப்பிலும் பெரிய வித்தியாசம் ஏதும் சொல்ல முடியாது. பின்னர்
ஏன்?” என்றார்.
“இதற்கு பதில் சொல்ல வரலாற்றை திருப்பி பார்க்க வேண்டியது இருக்கும்.
ஆரம்ப காலங்களில் ஒருவர் நடித்த படங்கள் சில
ஆண்களுக்கு பிடித்து இருக்கும். அதே நேரத்தில் மற்ற சில ஆண்களை வெறுப்படித்து
இருக்கலாம் ” என்றேன்.
“பாருங்கள். பெண்களுக்கு சூர்யாவை பிடித்திருக்கிறது. ஆனால் பாதி
ஆண்களுக்கு பிடித்த நடிகரை இன்னொரு பாதி ஆண்களுக்கு பிடிப்பதில்லை. அப்படியானால்
ஆண்களை அறிந்து கொள்வதுதானே கடினம்?” என்று கேட்டார்.
“யோசிக்க வேண்டிய கேள்வி. ஆனால் நீங்கள் எப்பொழுதாவது ஆண்களை அறிந்து கொள்ள முயற்சி
செய்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன்
“நான் எதற்கு செய்ய வேண்டும்” என்று கேட்டு முகத்தை திருப்பி
கொண்டார்.
உண்மையை சொல்லப் போனால் ஆண்களோ பெண்களோ மனிதர்களை புரிந்து கொள்வதுதான் கடினம். ஆனால் பாருங்கள் ஆண்கள்
எப்பொழுதும் பெண்களை புரிந்து கொள்ள முயன்று தோற்று பெண்களை புரிந்து கொள்ளவே
முடியாது என்று எழுதி வைத்து விட்டனர். ஆனால் ஆண்களை புரிந்து கொள்ள பெண்கள்
முயல்வதில்லை. ஆண்களும் கூட.
மேற்கண்ட பதிவில் பாதி கற்பனை
குழப்ப சிந்தனை தொடரட்டும்..
ReplyDelete