Friday, August 23, 2013

ஒன்றை இரண்டாக்கி, இரண்டாவதை '3' ஆக தந்த கஸ்தூரிராஜா குடும்பம்

மிழில் ஒரு ஆண்டுக்கு எத்தனையோ படங்கள் வருகின்றன. அவ்வளவு படத்துக்கும் கதை எப்படி பிடிக்கிறார்கள் என்று எப்போதேனும் யோசித்ததுண்டா? 'தலைவா' மாதிரியான படங்களை விட்டு விடவும். ரீ மேக் படங்களையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம். இவை தவிர்த்து வரும் படங்களுக்கு யார் மூல கதை எழுதுகிறார்கள்? திரைக்கதை எழுதுவது யார்? டைட்டிலில் போடுவது போல உண்மையிலேயே படத்தின் டைரக்டர்தான் கதை எழுதுகிறாரா? இல்லை என்ற பதில் நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் இங்கே நான் கூறப்போகும் விஷயம் என்னை மிக ஆச்சரியபடுத்திய விஷயம். 

பொதுவாக ஆங்கில படங்கள் நான் அவ்வளவாக பார்ப்பதில்லை. பார்த்த சில படங்களும் ஸ்பைடர் மேன், ஜாக்கிசான், அனகோண்டா வகையறா டப் செய்யப்பட்ட படங்கள். சமீபத்தில் ஒரு பொழுது போகாத தருணத்தில் ஒரு ஆங்கில படம் பார்க்க நேர்ந்தது. படத்தின் பெயர் 'A  beautiful mind'. சிறந்த படம் என்று சிலர் பரிந்துரைத்ததால் அந்த படத்தை பார்க்க ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை அந்த படத்தை ஏற்கனவே எங்கேயோ பார்த்தது போலவே தோன்றியது. சிறிது சிரமப்பட்டு யோசித்ததும் சில தமிழ் சினிமாக்களின் கதை, காட்சிகள் அந்த படத்திலிருந்து உருவப்பட்டிருப்பது புரிந்தது.

'A  beautiful mind' படத்தின் கதை இதுதான். படத்தின் கதாநாயகன் ஒரு கணித மேதை. படிக்கும் காலத்திலிருந்தே அதிகம் தனிமை விரும்புபவனாகவும், பெரும்பாலான நேரத்தை கணித சிக்கல்களை தீர்ப்பதிலேயும் செலவிடுகிறான். படிப்பிற்கு பின் கணித பேராசிரியராக பணியில் சேர்கிறான். தன்னுடைய மாணவியை காதலித்து மணந்தும் கொள்கிறான். திருமணத்திற்கு பின் அவனுடைய மனைவி அவன் மன நோயால் பாதிக்கபட்டிருப்பதை கண்டு பிடிக்கிறாள். அவனுடைய மனம் சில உருவங்களையும் சம்பவங்களையும் கற்பனை செய்து கொண்டு, அவற்றை உண்மை என்று நம்பி வருவது அவளுக்கு தெரிய வருகிறது. இந்த மனநிலை பாதிப்பிலிருந்து எப்படி கதாநாயகன் மீண்டு வந்து சாதிக்கிறான்? அவனுடைய மனைவி அவனுக்கு எந்த அளவு ஆறுதல் அளித்து அவனை மிக பெரிய சாதனைகள் செய்ய வைக்கிறாள் என்பது மீதி கதை.

இந்த படத்தின்  கதையை படித்ததும் உங்களுக்கு இரண்டு தமிழ் படங்கள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஒன்று மயக்கம் என்ன, மற்றொன்று 3. 'மயக்கம் என்ன' படத்திற்கு கதை எழுதிய செல்வராகவன் மனைவியும், 3 படத்திற்கு கதை எழுதிய ஐஸ்வர்யா தனுஷும் தங்கள் வீட்டில் சேர்ந்து அமர்ந்து 'A  beautiful mind' படம் பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒரே படத்தை இரண்டாக்கி தனுஷை வைத்து எடுத்து முடித்து விட்டனர்.


 'மயக்கம் என்ன' பல இடங்களில் ஆங்கில படத்தோடு ஒத்து போகிறது. அந்த படத்தின் இடைவேளைக்கு பின் வரும் கதை அப்படியே ஆங்கில படத்தின் தழுவல். அதிலும் படத்தின் இறுதி காட்சி அப்படியே ஆங்கில படத்தின் அட்ட காப்பி. ஆங்கில படத்துக்கும், தமிழ் படத்துக்கும் இருக்கும் ஒரு  வித்தியாசம்   ஆங்கில பட நாயகன் மனநிலை பாதிப்பு அடைந்த  பின்னும் மென்மையானவனாக  இருக்கிறான். அவன் கண்களுக்கு தெரியும் உருவங்கள் மட்டுமே அவனின் பிரச்சினை. ஆனால் தனுஷோ மனநிலை பாதித்தவுடன் பார்ப்பவர்களை எல்லாம் அடித்து துவைக்கிறார்.


தனது அக்கா தன்னுடைய கதையில் பயன்படுத்த தவறிய மனதில் தோன்றும் பிம்பங்கள் (hallucination) விஷயத்தை தன்னுடைய கதையில் பயன்படுத்திக்கொண்டு விட்டார் ஐஸ்வர்யா. இந்த கதைக்கும் ஒரிஜினல் ஆங்கில படத்துக்கும் உள்ள வித்தியாசம் தனுஷின் பிரச்சினை கடைசி வரை அவர் மனைவிக்கு தெரியாது. தனுஷ் தானாகவே இந்த மனநோயில் இருந்து விடுபட போராடி முடியாமல் கடைசியில் தற்கொலையும் செய்து கொள்கிறார். 'A  beautiful mind' படத்தின் பெரும்பகுதியை 'மயக்கம் என்ன' படம் எடுத்து  கொண்டதால் ஐஸ்வர்யா தன்னுடைய கதையில் ஏற்படுத்தி கொண்ட மாற்றம் இது.

பெரும்பாலான தமிழ் படங்கள், ஆங்கில படத்தில் இருந்து காப்பி அடிக்கப்படுபவை என்று எனக்கு தெரியும். ஆனால் ஒரே படத்தை இரண்டாக பிரித்து எடுத்து, இரண்டு படத்திலும் ஒரே நடிகரை நடிக்க வைத்து, அந்த படங்களையும் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியிடுவார்கள் என்ற விஷயம் எல்லாம் இதுவரை நான் அறியாதது மட்டும் இல்லை; கற்பனை செய்தும் பார்க்காதது. எனக்கு மிகவும்  பிடித்த இயக்குனர் செல்வராகவன்தான் இதில் ஒரு படத்தின் இயக்குனர் என்பது எனக்கு இன்னும் அதிர்ச்சியான விஷயம். எது எப்படியோ ஒரு கதையை தங்கள் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு இல்லாமல் பாக பிரிவினை செய்து கொண்டு விட்டனர்.

தமிழ்நாட்டிலேயே கூறாத கதைகள் நிறைய இருக்கும்போது ஏன் இந்த அளவுக்கு இறங்கி காப்பி அடிக்கிறார்கள் என்பது புரியவில்லை. தமிழில் சிறந்த படங்கள் உருவாக வேண்டுமென்றால் இயக்குனர்கள் படம் இயக்குவதை மட்டும் பார்த்து கொண்டு கதை, வசனம் போன்ற சமாசாரங்களை எழுத்தாளர்களிடம் விட்டு விடுவதே சிறந்த வழி. அந்த மாற்றம் வரும் வரை ஆங்கில படங்கள் பார்க்காமல் இருப்பதே நாம்  தமிழ் படங்களை ரசிப்பதற்கு  ஒரே வழி.

பின்குறிப்பு: 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய் தனது வகுப்பறைக்கு அருகில் வேலை செய்து கொண்டிருப்பவர்களை சிறிது நேரம் சத்தம் எழுப்பாமல்  இருக்க சொல்வது போல ஒரு காட்சி வரும்.  இது  'A  beautiful mind' படத்தின் கதாநாயகி அறிமுக காட்சியின் காப்பி.

7 comments:

  1. A beautiful mind வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டதே!
    கதையை உல்டா பண்ணும் வேலை எளிது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி நண்பரே...

      Delete
  2. இதிலிருந்து பட டைரக்டர்களுக்கு புதிய கதை பண்ணும் beautiful mind இல்லைன்னு தெரியுது ,,இருந்தாலும் வத்திகுச்சி இப்படி கொளுத்திப் போடக்கூடாது!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.. நன்றி நண்பரே...

      Delete
  3. A beautiful mind - Awesome Movie. அதையும் இவங்க விட்டு வைக்கலையா.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...