Tuesday, November 5, 2013

கொஞ்சம் கிரிக்கெட்

ந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்து விட்டது. போட்டிக்கு போட்டி அதிவேக சதம், அதிவேக அரை சதம், இரட்டை சதம் என பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டு பழைய சாதனைகள் தகர்க்கப்பட்டன. . பந்தை பேட்ஸ்மேன்கள் நினைத்த போதெல்லாம்  எல்லை கோட்டை தாண்டி அடித்தனர். இதற்கு முன் இது போன்ற பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய எந்த ஒரு தொடரையும் பார்த்தது போல நினைவில்லை.

இது போன்ற தொடர்கள் பார்ப்பதற்கு வேண்டுமானால் விறுவிறுப்பாக இருப்பது போல தோன்றலாம். ஆனால் இப்படிப்பட்ட தொடர்களால் கிரிக்கெட்டுக்கு எந்தவித பலனும் இல்லை. எல்லை கோட்டுக்கு அருகில் அதிக பட்சம் நான்கு பேர் நிற்கலாம் என்பதில் தொடங்கி இரண்டு புதிய பந்துகள், பேட்ஸ்மேன்களுக்கு எந்த ஒரு சிரமமும் தராத பிட்ச் என பல காரணங்களும் சேர்ந்து ரன் குவிப்பதை மிக  சுலபமாக்கி விட்டது. பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிப்பதை மிக எளிதாக செய்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் பந்தை அதிக தூரம் அடிப்பவரே சிறந்த பேட்ஸ்மேன் என எதிர்காலத்தில் கருதப்படலாம். கிரிக்கெட் ஆட்டம், பேஸ்பால் ஆட்டம் போல மாறி விடும். சச்சினின் சத சாதனைகளை எட்டாவதாக களம் இறங்கும் ஒரு வீரர் முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


பந்து வீச்சாளர்களின் நிலையோ  மிக பரிதாபம் . இரண்டு புது பந்துகள் என்பதால் பந்தின் கடின தன்மை 50 ஓவருக்கும் குறையாது; சுழலவும் (spin) செய்யாது ;ரிவர்ஸ் ஸ்விங் வீசவும் வழி இல்லை. வீசப்படும் பந்து நான்கு  அல்லது ஆறுக்கு விரட்டப்பட கூடாது என்றால் ஒரே வழி பந்தை யார்க்கராக வீசுவதுதான். ஆனால் ஓவரின் ஆறு பந்தையும் துல்லியமாக  யார்க்கராக வீசுவது அத்தனை எளிதில்லை. சிறு தவறு செய்தாலும் பந்து புல் டாஸாக மாறி பேட்ஸ்மேன்களின் பணியை மிகவும் எளிதாக்கும். வரும் காலங்களில் ஒரு நாள் போட்டியில் 500 ரன்கள் அடிக்கப்பட்டு, அந்த ஸ்கோரும் சேஸ் செய்யபட்டலாம்.

உண்மையான கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் மோதி கொள்வது. ஆனால் ஐசிசியின் புதிய விதிகள் அது பேட்ஸ்மேன்களும் பேட்ஸ்மேன்களும் மோதிக் கொள்வது என்றாக்கிவிட்டது. இந்த விதிகள் மாற்றப்படாவிட்டால் இனி நம்மால் உடல் பலத்தை மட்டுமே நம்பி ஆடும் கிரிக்கெட் ஆட்டத்தை மட்டுமே காண முடியும். ஒருவேளை எப்போதாவது  நுணுக்கமான கிரிக்கெட் ஆட்டத்தை காண வேண்டுமென்று தோன்றினால் யூ ட்யூபில் சச்சினின் பழைய வீடியோக்களை பார்த்து கொள்ள வேண்டியதுதான்.

2 comments:

  1. மிகவும் உண்மை... இது கிரிக்கெட்டுக்கு கேடு அனால் பார்வையாளர்களுக்கு விருந்து ... கண்டிப்பா இதை மாத்தனும் அப்படி இல்லேன்னா 20-20 match மட்டும் தான் இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...