Friday, March 15, 2013

புரட்சி தலைவிக்கு ஒரு கடுதாசி. இல்ல கடிதம்னு வச்சுக்கலாம்.

மரியாதைக்குரிய முதல்வர் அவர்களுக்கு,

கடந்த திமுக  ஆட்சியில் வெறுப்புற்று கிட்டத்தட்ட உங்களுக்கு ஆதரவாக நண்பர்களிடம் பிரசாரம் செய்த  ஒரு குடிமகன் எழுதி கொள்வது. உங்களின் பல பணிகளுக்கிடையே வத்திகுச்சியில் என்ன வருகிறது என்று தேடி படிக்க உங்களுக்கு நேரமிருக்காது என்று எனக்கும் தெரியும். இருந்தாலும் நடந்ததை யாரிடமாவது  புலம்ப வேண்டிய கட்டாயம் எனக்கு. ஆகவே தங்களுக்கு எழுதுவதாக கற்பனை செய்து கொண்டு இந்த மடலை வரைகிறேன் .

சொந்த ஊரை விட்டு பல காரணங்களுக்காக மக்கள்  சென்னை வர வேண்டிய சூழ்நிலை இன்று உள்ளது. அதிலும் "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என்பது போல தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வர வேண்டிய சூழல். இது தவிர்க்க முடியாததுதான். ஆனால் அப்படி வருபவர்களுக்கு குறைந்த பட்ச போக்குவரத்து வசதிகளாவது அரசு செய்து தர வேண்டாமா? ரயிலில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்வது கிட்டத்தட்ட நரகம் போன்றது. அது குடும்பத்தோடு பயணம் செய்பவர்களுக்கு சாத்தியமும் இல்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்து தனியார் பேருந்தில் செல்லவும் நடுத்தர குடும்பஸ்தனுக்கு இயலாது. இந்நிலையில் அவன் நம்புவது அரசு பேருந்துகளையே. ஆனால் அரசு பேருந்து அவனுக்கு பாதுகாப்பான பயணம் செய்ய வழி செய்கிறதா? நிச்சயம் இல்லை. கடந்த வாரம் திங்கள் கிழமை மதுரையிலிருந்து சென்னை செல்ல அரசு பேருந்தில் முன் பதிவு செய்திருந்தேன். 9 மணிக்கு வர வேண்டிய பேருந்து 10 மணி வரை வரவில்லை.கிட்டத்தட்ட அனைத்து பேருந்துகளும் கால தாமதம்  . அதை நான் குறை சொல்லவில்லை. இந்தியாவில் இதை குறை சொல்லவும் முடியாது. அனால் அதன் பின் நடந்தவைதான் அதிர்ச்சி அளிப்பவை. 10 மணிக்கு  வந்த பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுனர் தான் அப்போதுதான் சென்னையிலிருந்து வந்து இருப்பதாகவும் அரை மணி கூட ஒய்வு கொடுக்காமல் மீண்டும் சென்னை செல்வது எப்படி என்றும் குறை பட்டு கொண்டார். ஞாயிறு அன்று 7 மணிக்கு எழுந்தவர் பின் ஒரு நிமிடம் கூட தூங்கவில்லையாம். ஆனாலும் ஓட்டுனர் பற்றாக்குறை இருப்பதாக கூறி அவரை மீண்டும் சென்னை செல்ல வற்புறுத்தி இருக்கிறார்கள். அவரும் வேறு வழியின்றி பேருந்தில் ஏறினார். நானும் வேறு வழியின்றி பயத்தை மறைத்து கொண்டு பேருந்தில் ஏறினேன். ஒரு வழியாக பயணம் தொடங்கியது.

பேருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் ஒரு சத்தம். பேருந்து சற்று தடுமாறி ஒரு ஓரமாக நின்றது.காரணம்  பேருந்தின் முன் சக்கரம் பங்சர். அதையும் நான் பெரிதாக சொல்லவில்லை.  ஏனெனில் அரசு  பேருந்தில் சக்கரம் தேய்ந்து முடிக்கும் வரை மாற்ற மாட்டார்கள் என்ற எதார்த்தம் தெரிந்தே இருந்தேன். ஆனால் நடத்துனர் அடுத்து சொன்னதைத்தான் ஏற்க முடியவில்லை. பேருந்தில் மாற்று சக்கரம் மட்டுமே உண்டு என்றும் அதை மாட்டுவதற்கு கருவிகள் இல்லை என்றும் கூறினார். வேறு பேருந்துகளிலிருந்து கருவி வாங்கினால் மட்டுமே வேலை தொடங்க முடியும் என்றார். ஆனால் அடுத்து வந்த நான்கு பேருந்துகளிலும் அந்த கருவிகள் இல்லை. பின்னர் ஒரு நல்ல மனம் கொண்ட லாரி ஓட்டுனர் ஒருவர் லாரியை நிறுத்தி கிட்ட தட்ட அரை மணி நேரம் உதவி செய்து வண்டியை கிளப்ப வைத்தார்.பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். நடுகாட்டில் எப்படியோ உதவி கிடைத்ததே என்று நிம்மதி கொண்டனர். ஆனால் நிம்மதி நெடு நேரம் நீடிக்கவில்லை. பயணம் தொடங்கிய 3 மணி நேரத்தில் பின் புறமிருந்து தட தட சத்தம். ஒட்டு மொத்த பேருந்தும் அலறியது. இந்த முறை நடத்துனர் பேருந்தின்  பின்புறத்தில் எதையோ வெட்டி விட்டால் சரி ஆகிவிடும் என்றார். 20 நிமிடங்களில் அதுவும் சரி ஆனது. பின் பிரச்னை எதும் இன்றி சென்னை வந்து சேர்ந்தோம்.

இந்த பயணத்தின்போது என் மனதில் எழுந்த கேள்விகள்.

"பேருந்து விபத்தில் சிக்கினால் அரசு எவ்வளவு  நிவாரணம் அளிக்கும்?"

"பெண்களும் குழந்தைகளும் பயணம் செய்யும் பேருந்தில் இத்தனை அஜாக்கிரதையா?" 

"வசதிகள் செய்து தர வேண்டாம். குறைந்தபட்ச பாதுகாப்பாவது உறுதி செய்யப்பட  வேண்டாமா?"

"முன்பதிவு செய்யும் இணைய தளம் மிக மோசமாக வகையில் வடிவமைக்கபட்டு  செயல்படுத்தபடுவது பயணிகள் அரசு பேருந்தை பயன்படுத்தாமல் இருக்க அரசு செய்யும் எச்சரிக்கையா?"


 "தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அரசு பேருந்துகளில் தொலைக்காட்சி எடுக்கபட்டது; சீட்கள் அதிகரிக்கப்பட்டன; கட்டணம் அதிகரிக்கபட்டது. இருப்பினும் பயணிகளுக்கு  பாதுகாப்பு இல்லையே"

 இருப்பினும் எனக்கு இன்னும் அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது. . என்றாவது ஒரு நாள் இவை அனைத்தும் சரி செய்யப்படும். நீங்கள் நிச்சயம் இதை ஒரு நாள் இதை மாற்றுவீர்கள். ஏனென்றால் இந்தியாவே நாளை என்ற நம்பிக்கையில்தானே இருக்கிறது.

நன்றி: இத்தனை நெருக்கடியிலும் பொறுமையாக இருந்து பேருந்தை பத்திரமாக ஊர் கொண்டு வந்து சேர்த்த ஓட்டுனர், நடத்துனர், சமயத்தில் உதவிய லாரி டிரைவர், சுயநலமே ஆனாலும் பேருந்தில் இருந்து இறங்கி உதவி செய்த பயணிகள். No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...