கடந்த சில நாட்களாக தமிழ்நாடு கொந்தளித்து கொண்டு இருக்கின்றது. லயோலா கல்லூரி மாணவர்கள் பற்ற வைத்த தீ தமிழ்நாடு முழுவதும் பரவி கொண்டு இருக்கிறது. ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையில் நடந்ததை இன படுகொலையாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் வேண்டும் என பல கோரிக்கைகளுடன் போராடிக்கொண்டு இருக்கின்றனர். கோரிக்கைகள் நிறைவேருகின்றதோ இல்லையோ, குறைந்த பட்சம் ஈழ மக்கள் தனியாக இல்லை என்பதையாவது இந்த போராட்டங்கள் இலங்கை அரசுக்கு உணர்த்தும்.
ஈழம் ஏன் தேவை?
சிங்களர்களிடம் எப்போதும் ஒரு தமிழன வெறுப்பு இருந்து கொண்டே வருகிறது. புலிகள், தமிழர்களின் எந்த உரிமையை காப்பதற்காக போராடினார்களோ அதை இனி சிங்களர்களிடமிருந்து தமிழர்கள் பெறுவது கடினம் என்றே தோன்றுகிறது. மேலும் இலங்கையில் தமிழர்களின் அடையாளங்கள் அளிக்கப்பட்டு வருகிறது என்பதை அறியும்போது தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று சொல்வது சரி என்றே படுகிறது. இல்லாவிடில் இலங்கை தமிழர்கள் தங்கள் அடையாளம் இழந்து இரண்டாம் தர குடி மக்களாகவே வாழ வேண்டி இருக்கும். மக்களிடம் வாக்களிப்பு நடத்தி அவர்கள் விரும்பினால் தனி ஈழம் அமைத்து கொடுப்பதே உலகம் அவர்களுக்கு செய்ய வேண்டியது.
நடைமுறை சிக்கல்கள்
ஆனால் உலக நாடுகளுக்கு தங்கள் சுயநலம்தான் முக்கியமே தவிர எப்போதும் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்க போவது இல்லை. அதிலும் இந்தியா ஒருபோதும் ஈழத்திற்கு ஆதரவு தராது.
ஈழம் உருவானால்?
ஒரு வேளை ஈழம் உருவானாலும் அதன் எதிர்காலம் கவலைப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கும். ஒரு சிறிய தீவில் இலங்கையை பகைத்து கொண்டு ஈழம் உருவாகுமானால் அதன் பின் என்ன நடக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்-பாலஸ்தீனம் போன்ற நாடுகளை விட இந்த நாடுகளின் உறவு மிக மோசமாக இருக்கும். அடிக்கடி நடக்கபோகும் போர்களால் பாதிப்பு அடைய போவது மீண்டு ஈழ மக்களே. என்னதான் வலிமையான ராணுவத்தை ஈழ மக்கள் உருவாக்கினாலும் அவர்களின் அமைதியான வாழ்க்கை கேள்விக்குறிதான். காலம் முழுவதும் பாதுகாப்புக்கு மற்ற நாடுகளை நம்பியே ஈழ மக்களால் வாழ முடியாது
ஈழம் தீர்வா ?
தனி ஈழம்தான் சிறந்த தீர்வு என்று தோன்றினாலும் அந்த மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கான வழி என்ன என்று சிந்தித்து செயல்படுவதே நம் கடமை. மீண்டும் அந்த மக்களை மீண்டும் போர்க்களத்தில் நிறுத்துவது தீர்வாகாது. இனியாவது அவர்களுக்கு நல்லதே நடக்கும் என நம்புவோம்.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்கு கவனிக்கவும் ஈழம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அந்த மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி செய்ய வேண்டும் என்றே கூறியுள்ளேன்.
No comments:
Post a Comment