"அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு" என்று சொன்ன ஒரு நாட்டில் இன்று அரசே நஞ்சை அளவுக்கு அதிகமாக விற்று கொண்டு இருக்கிறது. அதுவும் தமிழகத்தின் ஒரு அடையாளமாகவே குடி பழக்கம் மாறி போகும் அளவிற்கு. இந்தியாவிலேயே வேறு எந்த தொழிலும் தனியாரிடமிருந்து அரசுக்கு வந்த பின் வேறு எந்த தொழிலாவது இந்த அளவு வெற்றிகரமாக நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த வகையில் தமிழன் சாதனை படைத்து கொண்டிருக்கிறான். இந்த நிலையை மாற்ற சுயநலம் ஏதுமின்றி தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மது விலக்கிற்காக உண்ணாவிரதம் இருந்ததிரு. சசி பெருமாள் அவர்களுக்கு முதலில் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்தும் இவருக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் குடுத்து செய்திகள் வெளியிடாதது துரதிர்ஷ்டம்.
மதுவிலக்கு ஏன் தேவை?
குடிப்பதனால் தனக்கு கேடுதான் என்று திரைபடத்தில் கீழே எச்சரிக்கை காண்பிக்காவிட்டாலும் குடிப்பவர்களுக்கு தெரியும். தன் மக்களுக்கு ஊற்றி கொடுப்பதனால் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை என்று அரசுக்கும் தெரியும். இருப்பினும் இரண்டு தரப்புமே தற்காலிக சந்தோசமே பெரிதாக தெரிகிறது.குடிக்கலாமா? வேண்டாமா? என்று நடக்கும் மன போராட்டத்தில் பெரும்பாலும் கடைசியாக ஒரு முறை குடித்து கொள்வோம் என்ற முடிவையே குடிப்பவன் தினமும் எடுக்கிறான். ஒரு கட்டத்திற்கு பின் அந்த மன போராட்டம் மறைந்து குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையை அடைகிறான். தன்னை தானே முற்றிலும் அழித்து கொள்கிறான்.
அரசோ எதற்கும் கவலைப்படாமல் வருமானத்துக்காக தற்கொலைக்கு ஈடான செயலை செய்து வருகிறது . குடி பழக்கம் தவறு என்ற எண்ணம் சிறிது சிறிதாக மறைந்து வருவதால் எதிர்காலத்தில் ஒரு தலைமுறையே குடிக்கு முழுமையான அடிமைகளாக மாறினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.
மதுவிலக்கு சாத்தியமா?
உலகமயமாகிவிட்ட இன்றைய நிலையில் முழு மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்பதயும் ஒத்துகொள்ள வேண்டும். முழு மதுவிலக்கு காவல்துறைக்கு அதிகப்படி வருமானத்துக்குத்தான் வாய்ப்பு தரும். மேலும் முழுவதும் குடி அடிமை ஆனவர்களுக்கு ஒரே நாளில் முற்றிலும் இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதும் சாத்தியம் இல்லை. திடீரென்று இந்த பழக்கத்தை நிறுத்துவது எதிர் விளைவுகளையே தரும்.
மதுக்கடைகளை குறைத்து கொள்வது மட்டுமே இப்போதைக்கான தற்காலிக தீர்வு .மேலும் டார்கெட் வைத்து சாராயம் விற்பது போன்றவற்றை தவிர்த்து, மதுவுக்கு மார்க்கெடிங் செய்வதை அரசு குறைத்து கொள்ள வேண்டும்.மக்களுக்கும் மதுவுக்குமான இடைவெளியை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். இப்போதைக்கு மது பாட்டிலை உடைக்க முடியாதுதான். ஆனால் சற்று தள்ளியாவது வைக்க வேண்டும். செய்யுமா அரசு?
இதை பற்றி உங்கள் கருத்துகளை விட்டு செல்லுங்கள்
No comments:
Post a Comment