Saturday, March 2, 2013

எம்.ஜி.ஆர் ஆனவள் !

இது ஒரு கற்பனை கதை  



 எனக்கு முதல் கேஸ்  கொஞ்சம் நல்லபடியாக அமைந்து இருக்கலாம். ஆனால் கொஞ்சம் சிக்கலாய் போய் விட்டது. இருங்கள் நான் யார் என்று என்று சொல்லி விடுகிறேன். என் பெயர் விஸ்வநாத். சுருக்கமாக விசு. மனோதத்துவம்  படித்து விட்டு இந்த ஊரில் ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்து இருக்கிறேன். இந்த சின்ன  ஊரில் யார் என்னை தேடி வர  போகிறார்கள் என்று  எல்லாரும் கேட்டனர். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது . சின்ன ஊரோ பெரிய ஊரோ எல்லாருக்கும் தன் மனநிலை மீது ஒரு சந்தேகம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பரீட்சை எழுத போகிறவர்களும் கல்யாணம் செய்ய போகிறவர்களும் கவுன்சிலிங் வந்தாலே கிளினிக் நன்றாக போகும் என்று நினைத்தேன். ஆனால் கிளினிக் திறந்து 2 நாள் ஆகியும் யாரும் வரவில்லை. 

3 வது நாள் ஒருவர் வந்தார். பார்பதற்கு படித்தவர் போல இருந்தார். எனக்கு ஒரே மகிழ்ச்சி. முதல் கேஸ் ஆயிற்றே.

"குட் மார்னிங் சார்!" என்றார்.

"குட் மார்னிங்! உக்காருங்க. உங்க மனசுக்கு என்ன பண்ணுது"

"எனக்கு ஒன்னும் இல்ல சார். என் வொய்புக்கு தான். "

"அவங்க எங்க? கூட்டிகிட்டு வல்லியா?"

"வெளிய இருக்கா. முதல்ல உங்க கிட்ட பேசிடலாம்னு"

"சரி சொல்லுங்க. என்ன அவங்களுக்கு?"

"அவளை பாத்தா எனக்கு பயமா இருக்கு சார்"

"அது எல்லாருக்கும் இருக்குறதுதான்."

"இது அந்த பயம் இல்ல சார். அவ வித்தியாசமா நடந்துகிறா. ஸ்பிலிட் பெர்சானாலிடி மாதிரி "  நிஜமாகவே அவரிடம் மிரட்சி தெரிந்தது.

"என்ன பண்றாங்கன்னு சொல்லுங்க"

"அவ அவளை எம்.ஜி.ஆர்  மாதிரி நெனச்சிகிறா."

"கொஞ்சம் வெவரமா சொல்லுங்க"

"நேத்து அவ திடீர்னு எங்க என் தொப்பியும் கண்ணாடியும்னு கேட்டா. எனக்கு ஒன்னும் புரியல. என்னமா ஆச்சு. எந்த தொப்பியும் கண்ணாடியும்னு கேட்டேன்.  நான்தான் எப்பவும் போடுவேனே அதுதான்ன. எனக்கு ஒன்னும் புரியல. நான் ஷுட்டிங் கெளம்பணும் சீக்கிரம் தேடி எடுத்து குடுங்க. திரிலோக சந்தர் எனக்காக காத்திக்கிட்டு இருப்பார்னா. அப்புறம் மயங்கி விழுந்துட்டா"

" அதுக்கு அப்புறம்"

"மயக்கம்  தெளிஞ்சதும் என்   அம்மா அவங்களை மந்திரிக்க கூட்டிகிட்டு போனாங்க. அங்க போய் பூசாரிய பாத்து நாகேஷ், காமெடி எல்லாம் எல்லாம் நல்லா வந்து இருக்கு. பிரமாதபடுத்திடீங்க அப்படின்னு உளறி இருக்கா. பத்தாதுக்கு உதட்ட எம்.ஜி.ஆர் மாதிரி சுழிச்சு வேற இருக்கா. சுத்தி இருந்தவங்க எல்லாம் எம்.ஜி.ஆர் ஆவி இவளை பிடிச்சு இருக்குனு அவளை சுத்தி வளைச்சிகிட்டாங்க. போதும் அவளை திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு எங்க அம்மாக்கு"

எனக்கு ஆர்வம் கூடியது. முதல் கேஸே என் திறமைக்கு  சவால் அளிக்க கூடியது . எப்படியாவது அந்த பெண்ணை குணபடுத்தி விட்டால் போதும். பேப்பரில் விளம்பரம் குடுத்து ஊரையே கலக்கி விடலாம். என் அடுத்த கேள்வியை கேட்டேன். 

"நீங்க எதுவும் கேட்டிங்களா அவங்க கிட்ட?"

"அவ வீட்டுக்கு  வந்ததும் என்னடி ஆச்சு உனக்கு. உன் பேரு பிரியா. நீ என் பொண்டாட்டின்னு சத்தம் போட்டேன். ஐயோ நீங்க என்னை நம்பவே மாட்டிங்களா  அப்படின்னு கையை மடக்கி முகத்துல வச்சு கிட்டு எம்.ஜி.ஆர் மாதிரியே அழ ஆரம்பிச்சுட்டா. நான் பயந்து போய்ட்டேன்." அவர் குரல் பதட்டமானது.

"சார்! பதட்டபடாதீங்க . சரி பணிடலாம்."

"இல்ல டாக்டர். அவ வயலண்ட்டா  வேற நடந்துகிறா. நேத்து நைட்  திடீர்னு என் பெல்டை வேற எடுத்துகிட்டு எங்க வீட்டு பிள்ளைல வர மாதிரி  பாட்டு பாடிகிட்டே என்னை அடிக்க வந்தா."

படித்த பாடத்த எல்லாம் நினைவுக்கு கொண்டு  வந்தேன். ஸ்ப்லிட் பெர்சனாலிட்டி, ஹிஸ்டிரியா, மல்டிபில் பெர்சனாலிட்டி எதுவாக இருக்கும். 

"ரொம்ப சீரியஸ் கேஸ்! சீக்கிரம் நீங்க என் கிட்ட வந்தது நல்லதா போச்சு."

"இதெல்லாம் கூட பொறுத்துகலாம் டாக்டர். ஆனால் இன்னைக்கு காலைல அவ செஞ்சதுதான் என்னால பொறுக்க முடியல. பக்கத்துக்கு வீட்டு பாட்டி ரொம்ப கஷ்டபடுதுன்னு சொல்லிட்டு எங்க வீட்ல இருந்து 10,000 ருபாய் எடுத்துட்டு போய் அவங்க கிட்ட கொடுத்துட்டா. நல்ல வேலையா அவங்க என் கிட்ட வந்து திரும்ப கொடுத்திட்டாங்க."

"அடடா " இப்போது எனக்கு பயமாக இருந்தது. இந்த கேஸ் ரொம்ப கஷ்டபடுத்தும் என்று தெரிந்தது. எப்படி கழண்டு  கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அவர் திரும்ப சொல்வதற்கு  ஆரம்பித்தார்.

"காலைல உங்களை பாக்க வரும்போது கூட மூட்டை தூக்கிட்டு இருந்த  ஒரு கிழவனை பாத்து முத்தம் குடுக்க போய்"

நான் சுதாரித்தேன். "எனக்கு புரியுது சார்! நீங்க அவங்களை உள்ள வர சொல்லுங்க. வெளிய தனியாவா இருக்காங்க?"

"இல்ல. என் அம்மா கூட"

"சரி நீங்க வெளியே இருங்க. அவங்களை  வர சொல்லுங்க"

சில நிமிடங்களில் அந்த பெண் உள்ளே வந்தார்.

"வாங்க பிரியா."

"சாரி டாக்டர் . என் ஹஸ்பண்ட் தனியாதான் உள்ள வருவேன்னு அடம் பிடிச்சார். எப்படியோ நீங்க அவர் கிட்ட பேசுனா போதும்னுதான்  தனியா அனுப்பிச்சேன். அவரை சீக்கிரமா  குணபடுத்திடலாம்ல. "

அதிர்ந்தேன். "என்னமா சொல்றீங்க. அவருக்கு என்ன?"

"அப்போ அவரு உங்க கிட்ட தெளிவாதான் பேசுனாரா?"

"ஆமா. என்ன அவருக்கு?"

"அவர் நேத்து காலைல இருந்து அவரை ஜானகி  எம்.ஜி.ஆர் மாதிரி கற்பனை பண்ணிக்கிறார். அது மட்டும் இல்ல. என்னையும் எம்.ஜி.ஆர் மாதிரி நெனச்சுகிட்டு ... ..............."




3 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...